கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரை வெளி வரையில், மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதி அபிவிருத்தி தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நேற்று (08.03.2025) குறித்த வீதியினை நேரில் சென்று
பார்வையிட்ட பின்னரே அவர் அப்பகுதி விவசாயிகளிடம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த
மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும்,
விளைச்சலையும் கொண்டு சென்று, வருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த
வீதியே இருந்து வருகின்றது.
தொடர்புடைய திணைக்களங்கள்
இந்நிலையில் அதைப்பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக
விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வீதியின் சில பாலங்களும் அமைக்கப்பட வேண்டியிருப்பதை இந்தச் சந்திப்பில்
இணைந்து கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் ஆளுநருக்கு
தெரியப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, வீதியை அபிவிருத்தி செய்வதற்கும் அத்துடன் பராமரிப்பது தொடர்பிலும் உரிய
நடவடிக்கை எடுப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்புடைய
திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடலில் ஈடுபடுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.