இந்த ஆண்டு ஆசிரியர் சேவையில் 7,913 நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தொடர்பில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே செயற்பட முடியும்.
கல்வி அமைச்சு நடவடிக்கை
அதிபர் சேவையில் 1610 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு (Ministry of Edcation) உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதேபோல் கல்வி நிர்வாக சேவையில் 1331 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் 422 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கான பரீட்சை நடைபெற்றது. இருப்பினும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் கல்வி சேவையில் 1310 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் முதல் கட்டமாக 706 பேருக்கு நியமனங்களை வழங்குவற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/1jwtgMRU6cQ