அனுராதபுரம்(anuradhapura) வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் சகோதரி கைது செய்யப்பட்டார்.
சகோதரி, அவரின் கணவரும் கைது
அதே நேரத்தில் அவரது கணவர் வைத்தியரின் கைபேசியை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.

அதன்படி, இருவரையும் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர்
கடந்த 10 ஆம் திகதி, அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் தனது கடமைகளிலிருந்து விடுதிக்கு சென்று கொண்டிருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று (12) கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

