மன்னார் நகருக்கான நேரடி இரு வழி
பொதுப் போக்குவரத்துச் சேவை உரிய முறையில் இல்லாமை குறித்து பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்கள்
திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், குறித்த கிராம அமைப்புகளின்
பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மன்னாரில் இன்றைய தினம் (07) விசேட ஊடக சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான
போக்குவரத்து குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
நீண்ட கால கோரிக்கை
இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மடு பிரதேச பிரசித்தி பெற்ற பகுதியாக இருக்கின்ற போதிலும் மன்னார்
மாவட்டத்தில் மடு பிரதேச எல்லைப்புற கிராமங்களில் வாழும் மக்கள் மன்னார்
நகருக்கான நேரடிப் பொதுப் போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.
அரச நிர்வாக சேவையைப் பெறுவது, கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதாரம்
மருத்துவ தேவைகளுக்கும், தமது உணவு, வாழ்வாதாரம்
தொழில், வியாபாரம் மற்றும் உள்ளூர் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்தல்
போன்ற தேவைகளுக்கும், வாடகை வாகனங்களுக்கு அதிக பணம் செலுத்தியும், பல
கிலோமீட்டர்கள் நடந்தும், போக்குவரத்திற்காக ஒரு முழு நாளையும் விரயமாக்கி, பல
சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது.
மடு வலயத்தில் அதிகமான மாணவர்களின் இடை விலகலுக்கும், உயர் கல்வியை தொடர
முடியாமைக்கு இந்த பொதுப் போக்குவரத்து இன்மையே முக்கிய காரணமாக இருக்கிறது.
இப்பிரச்சினைகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இப்பிரதேசம் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதற்கு பொதுப் போக்குவரத்து
இன்மையே மிக முக்கியமான காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.

