காரைநகர் பிரதேச சபையின்
செயலாளர், சபையின் முகநூல் வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் யாழ். தேர்தல் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் தவிசாளர் தலைமையில் கடந்த 2022 ஒகஸ்ட்
23ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த அமர்வில் உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா நிதி பங்களிப்பில் கசூரினா கடற்கரையின் உட்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான
பிரேரணை சில திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இது சம்மந்தமாக
முன்னாள் தவிசாளரின் முகநூலில் இவ்விடயம் 23.08.2022 பதிவேற்றம்
செய்யப்பட்டது. ஆனால் அந்தநிதி சிலபல காரணங்களால் கிடைக்கவில்லை என்பதை
முன்னாள் தவிசாளர் மீண்டும் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
முகநூல் பதிவு
இதனை மறுதலித்த செயலாளர் அந்த நிதி தனது பிரயத்தனத்தில் தான்
கொண்டுவரப்பட்டதாகவும் இது சம்பந்தமாக முன்னாள் தவிசாளரோ உறுப்பினர்களோ உரிமை
கோரமுடியாது என பிரதேச சபையின் உத்தியோகபூர்வ முகநூலில் தெரிவித்திருந்தார்.

அப்படியானால் 2022ம் ஆண்டு தான் தனது முகநூலில் பதிவேற்றம் செய்தபோது செயலாளர்
ஏன் மறுதலிக்கவல்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக பிரதேச சபையின் முகநூலில் கசூரினா பீச் அபிவிருத்திக்கு 40 மில்லியன்
ரூபா கிடைத்துள்ளதாக விளம்பரப்படுத்தினார்.
தேர்தல் காலப்பகுதி
இதனை காரைநகர் தேசியமக்கள் சக்தி
வேட்பாளர் தமது சாதனையாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்தார். இதற்கு
பதிலளிக்கும் முகமாகவே தனது முகநூலில் தான் பதிவேற்றியதாக முன்னாள் தவிசாளர்
குறிப்பிட்டார்.

இந்நிலையில் தேர்தல் காலத்தில் அரச சார் நிறுவனமொன்றின் உத்தியோகபூர்வ
முகநூலில் பிரதேச சபையின் செயலாளர் அரசியல் ரீதியான கருத்தியலை
வெளிப்படுத்தியதற்காகவே குறித்த முறைபாட்டை தான் மேற்கொண்டதாக காரைநகர் பிரதேச
சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து யாழ். தேர்தல் திணைக்கள முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி பிரதி
பதிவாளர் நாயகம் பிரபாகருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குறித்த முறைப்பாடு
எமக்கு கிடைக்க பெற்றது.
தேர்தல் காலத்தில் அரசியல்ரீதியான கருத்துக்களை அரச
அதிகாரிகள் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் இது குறித்து விசாரணைகளை
ஆரம்பிக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

