இலங்கையில் (Srilanka) கடன் அட்டையை பெற காத்திருப்போருக்கு உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் கடன் அட்டையை பெறும் போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (Taxpayer Identification Number (TIN) கட்டாயமாக்குவதன் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு மே மாதம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்திடம் இருந்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணை பெற வேண்டும் என்று அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
கட்டாயமாக வரி எண்
வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பிறகு 18 வயது பூர்த்தியடைபவர்களும் கட்டாயமாக வரி எண்ணைப் பெற வேண்டும்.
அதற்கமைய, வாகனத்தை பதிவு செய்தல், வாகனத்தை வேறொரு நபருக்கு மாற்றுதல், காணி பதிவு செய்தல், வணிகத்தை பதிவு செய்தல் மற்றும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுதல் ஆகியவற்றின் போது வரி எண் கட்டாயமாக இருக்கும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் தெரிவித்துள்ளது.
18 வயதை நிறைவு செய்த 10 மில்லியன் மக்களுக்கு வரி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 7 மில்லியன் பேர் வரி எண்களுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.