Courtesy: தீபச்செல்வன்
ஈழத் தமிழ் மக்கள் பெருமை கொள்ளுகின்ற வகையில் எம் மண்ணில் வாழ்ந்த ஒப்பற்ற புனிதராக மதிக்கப்படுகின்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராசப்பு ஜோசேப்பு, மதம் கடந்து நேசிக்கப்படும் உன்னத துறவி.
இந்தப் பூமியில் பல்வேறு மத தலைவர்கள் வந்து செல்லுகின்றனர். மதங்கள் எல்லாமே மனிதாபிமான தத்துவத்தைதான் போதிக்கின்றன.
அந்த தத்துவங்களை ஒழுகி உதாரண புருசர்களாக வாழ்கின்ற சில மத தலைவர்கள், குறிப்பிட்ட தம் மதங்களை தாண்டி, தேசத்தின் தலைவர்களாகவும் உலகின் தலைவர்களாகவும் குறிப்பிடத்தக்கவர்களாக வாழ்ந்துவிடுகின்றனர்.
அப்படியொரு புனிதரான இராசப்பு ஜோசேப்பு அவர்களின் நினைவுநாள் இன்று ஈழத் தமிழரின் நீதிக்காய் ஒலித்த குரல் இதேபோல் ஒரு நாள் (01.04.2021) ஓய்ந்த்து. ஈழத் தமிழர்களுக்கு பெரும் துயர நாளது.
இறைகல்வி
ஈழத்தின் வடக்கே யாழ்ப்பாணம் நெடுந்தீவு மண்ணில், ஏப்ரல் 16, 1940இல் பிறந்த இராயப்பு ஜோசேப்பு அவர்கள், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், முருங்கன் மகா வித்தியாலயம், யாழ் புனித பாத்திரியார் கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார்.
அத்துடன் கண்டி தேசிய குருமடம், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி புனித பவுல் குருமடம் முதலியவற்றில் குருத்துவக் கல்வியைப் பெற்று, டிசம்பர் 12, 1967இல் யாழ் மரியண்ணை தேவாலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1992இல் வத்திக்கானின் பாப்பரசர் இரண்டாம் சின்னப்பரால் மன்னார் மாவட்ட ஆயராக நியமனம் பெற்றதுடன் அதே ஆண்டில் மடு தேவாலயத்தின் ஆயராகவும் திருநிலை பெற்றார்.
ஈழத்தின் வடக்கே மன்னார் மாவட்டமானது எப்போதும் இன அழிப்பு போரை எதிர்கொண்ட மண்.

1999இல் மன்னார் மடு தேவாலயம் மீது சிங்கள அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மன்னார் மடு தேவாலயமே இரத்த வெள்ளத்தில் மூழ்க்கியிருந்தது. அத்துடன் 2008ஆம் ஆண்டிலும் மடு தேவாலயம் எறிகணை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.
சிங்கள மக்களும் வணங்குகின்ற மடு தேவாலயத்தைகூட தமிழ் மக்கள் தஞ்சமடைந்து இருந்தமையால் தாக்கி அழித்தன சிங்களப் படைகள். இவைகள் ஏன் எதற்காக சிங்களப் படைகளால் நடத்தப்பட்டன என்பதனை ஆயர் இந்த உலகிற்கு எடுத்துரைத்தார்.
இலுப்பக்கடவைப் படுகொலை
அது மாத்திரமின்றி 2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான இலுப்பக்கடவையில் விமான தாக்குதலை நடத்தி 13 தமிழ் மக்களை சிங்கள விமானப்படை கொலை செய்தபோதும், அந்த நிகழ்வை ஆயர் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்தார்.
2008 ஆம் ஆண்டில் சிங்கள அரசின் யுத்தம் காரணமாக மன்னார் மடு மாதா இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்ட போது ஆயர் பெரும் துயரம் அடைந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூகப் பணிகளையும் ஆயர் முன்னெடுத்தார்.

அவர்களுக்கான மறுவாழ்வு, வீட்டுத்திட்டம், நிதி உதவி என பல்வேறு உதவிகளை மதம் கடந்து மனிதநேயமாக செய்தார்.
மன்னார் ஆயரின் மகத்துவமான பணி 2009 இனப்படுகொலை யுத்தத்தின் பின்னர் இன்னொரு வகையில் முக்கியத்துவம் பெற்றது.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஈழ மக்கள் வலியுத்த தொடங்கிய 2010இற்கு பின்னரான காலத்தில், ஸ்ரீலங்கா அரசு கண்துடைப்புக்காக நல்லிணக்க ஆணைக்குழு என உள்ளக விசாரணை ஒன்றை நடாத்தியது.
இதன்போது இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு சாட்சியங்களை அளித்தனர்.
நீதிக்காய் வெகுண்டெழுந்த குரல்
இதில் முன்னிலையான ஆயர் இராயப்பு ஜோசேப்பு, 2009 இனப்படுகொலைப் போரில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டதை துணிவுடன் எடுத்துரைத்தார்.
மிக முக்கியமாக அரச ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 2009 போருக்கு முன்னர் இருந்த வன்னி மக்கள் தொகையில் இருந்து 2010அற்கு பின்னரான மக்கள் தொகையில் 146,679பேர், அதாவது சுமார் ஒன்றரை லட்சம் பேர் இல்லாமல் ஆக்கப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார்.
இனப்படுகொலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்? எப்படிக் கொல்லப்பட்டார்கள் என தமிழ் தலைமைகள் கூட எடுத்துரைக்க முடியாத காலத்தில் ஆயர் புள்ளி விபரங்களுடன் முன் வைத்த சாட்சியம் மிகவும் முக்கியமானது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத்தில் கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆயர் பல முக்கியமான விடயங்களைக் குறித்து பதிவு செய்திருந்தார்.
”கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல.பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம்.
சிங்கள மக்களிம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன…” என ஈழத்தில் தொடரும் இன அழிப்பை எடுத்துரைத்தார்.
சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்தார்
அத்துடன் “தமிழ் மக்கள் தனித்துவமான சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கு இடமளிப்பதன் மூலமே இந்த நாட்டை அமைதிப்படுத்த இயலும்.
இலங்கை சுதந்திரம் அடைந்தது என்ற விடயத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்பது ஓர் மாயையாக திணிக்கப்பட்டது தமிழ் மக்கள் இன்னமும் சுதந்திரத்தை அடையாத நிலையில் வாழ்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராகவும் அபிலாசைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன….” என்றும் அழுத்தமாக கூறினார்.
“தமிழ் மொழி மற்றும் நில அபகரிப்பு என்பது உலக சரித்திரத்தில் ஓர் இனம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அவ்வாறு நடை பெறுகின்றது.

இலங்கையில் நான்கு தடவைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக் கலவர நடவடிக்கைகள் இன அழிப்புச் செயற்பாடுகள். அந்த இன அழிப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது.
மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர் தொடர்ந்தும் இந்த நாட்டில் தமிழ் மக்களை வாழ விடாது வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலமையை உருவாக்கியதுடன் அரசாங்கமே மக்களை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது…” என்றும் ஈழத்தில் தொடரும் இன சுத்திகரிப்பையும் மன்னார் ஆயர் எடுத்துரைத்தார்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்
அத்துடன் “சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.
அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். புதிய இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கானது என தான் நம்பவில்லை. அவை உண்மையை மறைப்பதற்கான ஏற்பாடு.
இதற்காகவே இலங்கை அரசாங்கம் ஓடி ஓடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. உண்மையின் அடிப்படையில் உண்மையின் நீதியின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மக்களின் உரிமையை பாதுகாப்பும் பொறுப்போடு உருவாக்கப்பட்ட ஐ.நா தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியான வரலாற்றின் இறுதியிலேயே எம்மீது கவனம் செலுத்தியது. அதனை ஐ.நா உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது அல்ல. உலக மக்களின் மனித உரிமைகளுக்கு எதிரானது. உலக மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஓர் நடவடிக்கையே உலகப் பொது நடவடிக்கை.” என்றும் இனப்படுகொலைக்கான நீதி குறித்தும் இராயப்பு ஜோசேப்பு அவர்கள் அழுத்தம் திருத்தமாக பேச்சுரைத்தார்.
தமிழ் மக்களின் நீதிக்காகவும் உரிமைக்காகவும் பல அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளை தாண்டி, துணிவுடன் குரல் கொடுத்த மன்னார் ஆயர், தென்னிலங்கை இனவாத அரசி-யல்வாதிகளாலும், தென்னிலங்கை பேரினவாத ஊடகங்களாலும் புலி என்றும் பிரபாகரன் என்றும் சித்திரிக்கப்பட்டார்.
சில தென்னிலங்கை ஊடகங்கள், மன்னார் ஆயருக்கு புலிச் சீருடை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டன.
மதத்தை கடந்து மனிதாபிமானத்திற்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த மன்னார் ஆயரின் உன்னதமான பங்களிப்பு என்பது ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் என்றைக்கும் முக்கியதானதாகவே இருக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
01 April, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>

