ஆசிரியர் ஒருவர் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களை கொடூரமாகத் தாக்குவது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலையொன்றின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் மூன்றாம் வகுப்பு மாணவர்களை உலோக தடி ஒன்றில் அடித்து தண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலதிக நடவடிக்கை
அதன்படி, விசாரணைகளைத் தொடங்கியுள்ள அதிகாரசபை, பாதிக்கப்பட்ட இரண்டு 7 வயது மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பாடசாலையின் உப அதிபர் மற்றும் பெற்றோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

சந்தேகநபரான ஆசிரியர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிரியரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

