தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு
முன்பாக நேற்று(14) காலை ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.
குறித்த ஊர்தியானது, இன்று
கிளிநொச்சிக்கு வந்திருந்தது.பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில்
தரித்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த
ஊர்திப்பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊர்திபவனி
குறித்த ஊர்திபவனி வடக்கை சேர்ந்த
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை,
சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய
பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் குறித்த வாகனத்தில் காட்சி
படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வாகனபவனி மாவட்டம் தோறும்
வீதிகளில் பயணிக்கும் போது
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலை
எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில்
முள்ளிவாய்க்காலின் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சிக்கு
(இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில்
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று (15) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின்
செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ.
றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர்.
கஞ்சி வழங்கும் நிகழ்வு
யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி
வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மதியம் மன்னார் நகர
பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது.

எம்மவர்களின் வலி நிறைந்த வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கும், இளைய
தலைமுறையினருக்கும் கடத்தும் கடமை பல்கலைக்கழக மாணவர்களாகிய தமது பொறுப்பு என
அவர்கள் தெரிவித்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது குறித்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி
காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மே-12 ஆம் திகதி தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை யாழ்
பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சியை நேரடியாக சென்று காய்ச்சி மக்களுக்கு
வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலே இன்றைய தினம் வியாழக்கிழமை 4வது நாளாக மன்னாரில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டதாக மன்னாரிற்கு வருகை தந்த
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்தனர்.




