முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேவிபியும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்பதாலா கனடாமீது அச்சம்?


Courtesy: Theepachelvan

ஈழ மண்ணில் வரலாறு முழுவதும் ஒடுக்கி அழிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள், 2009ஆம் ஆண்டு மே மாத்தில் மிகப் பெரும் இனப்படுகொலையைச் சந்தித்தனர்.

கடலைப் பிழிந்தேனும் மீன்களை அழித்துவிட வேண்டும் என்று இலங்கை அரசு ஈழத் தமிழ் இனத்தை வகைதொகையற்று அழித்தாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்துவிட வேண்டும், அவர்களின் தனிநாட்டு கோரிக்கையை சிதைத்துவிட வேண்டும் என்று பாரிய அளவில் இனப்படுகொலையைச் செய்தது.

மறைந்த மேதகு மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு அவர்கள் அரச திணைக்களங்களின் பெறப்பட்ட புள்ளி விபரங்களின் படி ஒரு இலட்சத்து 46,679 மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார் என்பதை இலங்கை அரசின் ஆணைக்குழுவின் முன் சாட்சியாகத் தெரிவித்தார்.

கனடாத் தூபிக்கு சிறிலங்காவே வித்திட்டது

இந்த நிலையில் மே மாதம் என்பது ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கிய மாதம். முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை உச்சமாகச் சந்தித்த இந்த மாத்தில்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்துச் சிதைக்கப்பட்டது.

எனினும் தமிழ்தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற ஈழத் தமிழ் மக்களின் தாகத்தை ஒருபோதும் இலங்கை அரசால் சிதைக்க முடியாது என்றால்போல், 2009ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மே மாதம் ஒவ்வொன்றும் கட்டியம் கூறுகிறது.

ஜேவிபியும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்பதாலா கனடாமீது அச்சம்? | Tamil Genocide Awareness Brampton Jvp Sri Lanka

ஈழத் தமிழ் மக்களை இனவழிப்பு செய்துவிட்டோம், அவர்கள் மீண்டெழ மாட்டார்கள் என்று நினைத்திருந்த பேரினவாத்தின் முன்னால் மீண்டெழுந்த மக்களின் குறியீடாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகமயமாகி இருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாயக்கால் நினைவேந்தல் தூபி ஒன்று அமைக்கப்பட்டது.

இதனை கடந்த 2021ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாளன்று இரவோடு இரவாக சிறிலங்கா அரசு இடித்தழித்து. இந்த நிகழ்வு உலகத் தமிழ் மக்களிடம் மாத்திரமின்றி பன்னாட்டுச் சூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழர் தாயகத்தில் யாழ் பல்லைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை சிறிலங்கா அரசு, அழித்தமையே கனடாவில் இன்று பாரிய நினைவுத் தூபி அமைப்பதற்கு கால்கோளாக அமைந்தது என்பதை சிறிலங்கா அரசு உணர வேண்டும்.

நீதிமுகமாக கனடா

அந்த வகையில் கனடாவின் பிராம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் கடந்த 10ஆம் திகதி 4.8 மீற்றர் உயரத்தில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. அதனை கனேடிய தலைவர்கள் திறந்து வைத்தனர்.

ஈழத் தமிழ் மக்களின் நீதி கோரிய போராட்டப் பயணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலையும் நம்பிக்கையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

ஜேவிபியும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்பதாலா கனடாமீது அச்சம்? | Tamil Genocide Awareness Brampton Jvp Sri Lanka

அத்துடன் இந்த நிகழ்வில் பேசிய பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்  இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை என்று கூறியிருந்தார்.

அத்துடன் “நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர்.

இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் இது. தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன…” என்றும் அவர் கூறியிருந்தார்.

சந்ததிக்கான பாடம்

பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னமானது எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான, சிந்திப்பதற்கான இடமாக மாறும் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்பதாலா கனடாமீது அச்சம்? | Tamil Genocide Awareness Brampton Jvp Sri Lanka

அத்துடன், ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம், “முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக்குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம். தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடகின்றது, 167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது…” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் குறியீடாக அமைந்த கரங்களில் ஈழ வரைபடம் ஏந்திய குறித்த நினைவுத்தூபியின் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தன. குறிப்பாக சிங்கள இனவாத கருத்துக்களைக் கொண்டவர்களிடம் பெரிய வற்றெரிச்சலை உண்டு பண்ணியது.

இதேவேளை குறித்த நினைவுத் தூபியைக் கண்டு ஶ்ரீலங்கா அரசும் பெரும் கொந்தளிப்பை அடைந்துள்ளதாம். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்காக அனுதித்தமைக்கு, இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாமலின் அச்சம்

இலங்கையின் வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சினால் கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் “இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தின் போது இனப்படுகொலை நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் நிரூபிக்கப்படவில்லை.

ஜேவிபியும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்பதாலா கனடாமீது அச்சம்? | Tamil Genocide Awareness Brampton Jvp Sri Lanka

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களைக் கட்டுவதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய இலங்கையின் உண்மையான முயற்சிகளைத் தடுக்கிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் மொழியில் இன நல்லிணக்கம் என்பது இன ஒடுக்குமுறையும் அழிப்பும் என்பதை உலகம் நன்கறியும்.

கனடா இனப்படுகொலை நினைவுத் தூபிமீதான இலங்கை அரசின் எதிர்ப்பும் இனப்படுகொலையாளிகளின் பதற்றமும் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை உறுதிப்படுத்தும் சூழலையே வலுப்படுத்துகின்றது.

எடுத்துக்காட்டாக தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் கூறியமை நாமல் ராஜபக்சவை வாயடைத்துப் போகச்செய்தது.   

இனப்படுகொலையில் ஜேவிபி 

அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறுதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கடந்த காலத்தில் மகிந்த அரசுக்கு இனப்படுகொலைப் போரை நடாத்தி விடுதலைப் புலிகளை அழியுங்கள் என ஆணையிட்டது ஜேவிபியினரே.

ஜேவிபியும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்பதாலா கனடாமீது அச்சம்? | Tamil Genocide Awareness Brampton Jvp Sri Lanka

அதற்காக ஜேவிபி பாரிய ஆர்ப்பாட்டங்களை கொழும்பில் நடாத்தி அரசுக்க அழுத்தம் கொடுத்தது. இனப்டுகொலைப் போருக்கு ஆதரவாக சிங்கள மக்களை திரட்டும் போராட்டங்களைச் செய்தது.

அதனை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா, ஜேவிபி பொதுச்செயலாளர் ரிவின் சில்வா, முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க போன்றவர்கள் நாடாளுமன்றத்திலும் ஒப்புக்கொண்டு போர் வெற்றியை உரிமை கோரியுள்ளனர்.

எனவே அவர்களும் இனப்படுகொலையின் பங்காளிகள் என்ற வகையில் தம்மை பாதுகாக்க முனைவது என்பது இயல்பானது. ஆனால் யாழ் பல்கலைக்கழ நினைவுத்தூபியை உடைத்து, இன்று கனடாவில் பாரிய நினைவுத் தூபி அமைவதற்கு இலங்கை அரசு காரணமாகியுள்ளதைப் போலவே எதிர்காலத்தில் உலக நாடுகளில் இத்தகைய இனப்படுகொலை நினைவுத்தூபிகள் எழுதவற்கு இந்த அரசும் வழி செய்யப்போகிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
17 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.