இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும்
சிதையாமற் காத்த மாவை. சோ.சேனாதிராஜாவை படுகொலை செய்ய முயன்ற
ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்
கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(6) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்,
தமிழரசின் மேனாள் தலைவர்
மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது
உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற
மேனாள் உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மேனாள் கிராம அலுவலர் சிவராசா
உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த
இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும்
2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல்
மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த
இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும்,
மாவை.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும்,
வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு
நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி,
அவரது நினைவுகளைப் பதிவுசெய்கிறேன்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து,
யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது
பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக
இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட மாவை.சோ.சேனாதிராஜா,
ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக
பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர்” என குறிப்பிட்டார்.

