தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும்
அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,
புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச்
சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட
செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகள்
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன்
இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில
அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று
வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப் போராடும் வாழ்வதார
சிகிச்சையை வழங்கி வருகிறது.
ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர்
மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட
இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை
ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும்
புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல்,
சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம்
கடுமையாகக் கண்டிக்கின்றது.
அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து
பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து
வருகின்றது.
நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள்
இச் சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல. அதுவே
நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு
இடமளிக்கும் நிலை ஆகும்.
இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய
களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது.

அத்துடன், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு,
அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும்
சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனை விதிகள் இன்றி
தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து
வருகின்றது.
எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச்
சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பழை ஆதார
வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும்
அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும்.
மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும்
புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச
மருத்துவமனையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க
நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும்.
நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல;
நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

