பெருந்தேசிய ஆக்கிரமிப்புகளை ஒருங்கிணைந்து முகம் கொடுப்பதற்கும் சர்வதேச
அரசியலைக் கையாள்வதற்கும் தேசமாக திரளுதல் அவசியமாகும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல்
ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தமிழ் அரசியல் அண்மைக்காலமாக ஒரே பரபரப்பாக உள்ளது. தமிழ்த்தேசிய
பேரவைக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு
உடன்படிக்கை, உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகள் சுமந்திரன்,விக்னேஸ்வரன் உடன்படிக்கை, சி.வி.கே.சிவஞானம் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு,
என்பனவே சூழலை பரபரப்பாக்கியுள்ளன.
தமிழ்த் தேசியப் பேரவை
நிச்சயமான கூட்டுக்களாக இருப்பவை தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த்
தேசியக் கூட்டணிக்கிடையிலான கூட்டும், தமிழரசுக் கட்சி – தமிழ் மக்கள் கூட்டணி
கூட்டும் தான்.
முதலாவது கூட்டு ஒரு கொள்கைக் கூட்டாக இருக்கின்ற அதேவேளை
இரண்டாவது கூட்டு நல்லூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டு
கொள்கின்ற கூட்டாக உள்ளது.
இதில் கொள்கைக் கூட்டு என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் பேரவை – ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான கூட்டுத்தான் பிரதான பேசுபொருளாக உள்ளது.

வலைத்தளங்களும் அதனை மையப்படுத்தியே விமர்சனக் கருத்துக்களை அதிகளவில்
முன்வைக்கின்றன.
இது தொடர்பான இரண்டு பக்க ஒப்பந்தம் கடந்த 02 ம் திகதி தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவர் கஜேந்திர குமாருக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் பொதுச் செயலாளருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த
பிரதான கைச்சாத்துடலுக்கு புறம்பாக கூட்டணியிலுள்ள அனைத்து அமைப்புகளும்
ஒப்பந்தத்தை ஏற்று தனித்தனியாக கைச்சாத்திட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பிரதானமாக ஐந்து விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
தாயகம், தேசியம், சுய நிர்ணயம் அடிப்படையில் அரசியல் தீர்வு, 13வது
திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்வதில்லை, நல்லாட்சிக் கால “ஏக்;கிய
இராச்சிய” அரசியல் தீர்வை நிராகரித்தல், இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை,
முஸ்லீம் மக்களை அரசியல் தீர்வில் உள்ளடக்குவது தொடர்பாக முஸ்லீம் மக்களுடன்
கலந்துரையாடுதல் என்பனவே இவ் ஐந்துமாகும்.
தமிழ் அரசியல் சமகாலத்தில்
சந்திக்கின்ற முக்கிய விவகாரங்களை ஒப்பந்தம் உள்ளடக்கியிருக்கிறது எனக்
கூறலாம்.
எனினும் மலையக மக்கள், தமிழக மக்கள் பற்றி எதுவும் கூறப்படாதது பொதுவான
விமர்சனமாக முன்வைக்கப்படுகின்றது.
தவிர ஒப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்களை
நிறைவேற்றுவதற்கான வழி வரைபடம் பற்றி எதுவும் கூறப்படாதும் குறைபாடாக உள்ளது.
விமர்சனங்கள்
தீவிர தேசியவாதிகள் சிலர் சந்திரகுமாருக்கு புனித நீர் தெளித்தமை தொடர்பான
விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படம் ஒன்றும்
வலைத்தளங்களில் உலாவியிருந்தது. அரசியல் சூழல் மாறும் போது பண்புருமாற்றம்
நிகழ்வது இயற்கையே! இதன்போது புதிய கூட்டுக்களும், புதிய அணி சேர்க்கைகளும்
உருவாகலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதும் ஒரு பண்புரு
மாற்றம் தோன்றியது.

முரண்பட்ட அரசியல் சக்திகள் ஒன்றாக இணைந்திருந்தன.
சந்திரகுமாரை உள்வாங்கியமையும் ஒரு பண்புருமாற்றமே! இனிமேல் சந்திரகுமார்
தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக செல்வது இதன் மூலம் தடுக்கப்படுகின்றது.
தேசத்தில் பல சக்திகளும் இருக்கும். தேசமாக திரட்டல் என்பது ஒரு அரசியல்
இலக்கின் கீழ் அனைவரையும் திரட்டுவது தான். தூய்மை வாதம் பேசிக்கொண்டிருந்தால்
மக்களை ஒருபோதும் தேசமாகத் திரட்ட முடியாது” என்றுள்ளது.

