இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர்
வாங் யி இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துள்ளார்.
நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நீடித்த நட்பின் அடிப்படையில் ஒரு மூலோபாய
கூட்டுறவு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு உதவவும் சீனா தயாராகவுள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வெளியுறவு அமைச்சர்களும் நேற்று(12) மலேசிய கோலாலம்பூரில் சந்தித்துக்
கொண்டபோதே இந்த விடயத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளார்.
சீனாவுடனான உறவு
சீனா இலங்கையின் நம்பகமான பங்காளி என்றும், இரு தரப்பினரும் பல்வேறு துறைகளில்
உயர்தர பட்டுப்பாதை ஒத்துழைப்பையும் நடைமுறை ஒத்துழைப்பையும் ஆழப்படுத்த
வேண்டும் என்றும் வாங் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய இரண்டு
முதன்மைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், சீன-இலங்கை சுதந்திர வர்த்தக
ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தவும், பசுமை எரிசக்தி,
டிஜிட்டல் பொருளாதாரம், நவீன விவசாயம் மற்றும் கடல்சார் பொருளாதாரம் போன்ற
துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வளர்ச்சிகளை உருவாக்கவும் இரு தரப்பினரும்
இணைந்து செயற்பட வேண்டும் என்றும் வாங் கூறியுள்ளார்.
இந்தநிலையில், சீனாவுடனான உறவுகளுக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம்
அளிக்கிறது மற்றும் ஒரு-சீனா கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கிறது என்று
இலங்கையின் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் கடல்சார்
விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்,
மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் சீனாவுடன் இணைந்து
பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

