நாட்டில் சில பகுதிகளில் அண்மையில் யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக தீவிர
விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சு கோரிக்கை
விடுத்துள்ளது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, பதில் பொலிஸ் மா அதிபர்
பிரியந்த வீரசூரியவுக்கு அதிகாரப்பூர்வ கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கையை
முன்வைத்துள்ளார்.
இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சுற்றாடல் அமைச்சு கோரிக்கை
சமீப காலமாக, வேட்டைக்காரர்கள், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள்
மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளில்
வசிக்கும் சில விவசாயிகளால் யானைகள் சுடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக
சுற்றாடல் அமைச்சு தீவிர கவலையை தெரிவித்துள்ளது.

காட்டு யானைகள் இயல்பாக நடமாடும் பகுதிகளில் சட்டவிரோத துப்பாக்கிகள்
வைத்திருப்போர் யார் என்பதைக் கண்டறிந்து, அவை பறிமுதல் செய்யும் பணியில்
விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது.

