இலங்கை சுங்கத்தின் வசம் தற்போது உள்ள சுமார் 1000 BYD ரக மின்சார வாகனங்களை
விடுவிக்கக் கோரி ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவம் தாக்கல்
செய்த மனுவை மறுபரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 7ஆம்
திகதி மீண்டும் கூடவுள்ளது.
இந்த வாகனங்களை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், வங்கி
உத்தரவாதத்தின் கீழ் வாகனங்களை விடுவிக்கலாம் என்றும் மனுதாரர் வாதிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்
இலங்கை சுங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், மேலதிக மன்றாடியார் நாயகன்
சுமதி தர்மவர்தன 997 வாகனங்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
உறுதிப்படுத்தியுள்ளார்.
இறக்குமதி வரிகளை கணக்கிடுவதில் முக்கிய காரணியாக கருதப்படும் மோட்டார் திறனை
தீர்மானிக்க மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள்
குழுவும், BYD இன் பொறியியலாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.
திருத்தப்பட்ட வரித் தொகை
பாதுகாப்பு நடவடிக்கையாக சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கணக்கில் திருத்தப்பட்ட
வரித் தொகைகள் வைப்பு செய்யப்பட வேண்டிய நிலையில், ஆறு வாகனங்களைத் தவிர மற்ற
அனைத்தையும் விடுவிக்கும் ஒரு திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அவர்
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த விசாரணையில் இந்த முன்மொழிவுக்கு பதிலளிக்குமாறு மனுதாரருக்கு
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.