மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவன் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து 16 பவுண் தாலிக் கொடியை அறுத்து கொண்டு தப்பியோடியுள்ளான்.
குறித்த சம்பவம், நேற்று(28) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தெரியவருவதாவது, கொக்குவில் காவல்துறை பிரிவிலுள்ள ஓவசியர் வீதி சின்ன ஊறணி பகுதியிலுள்ளள வீடு ஒன்றில் தாதியர் உத்தியோகத்தர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 65 வயதுடைய வயோதிப பெண்ணும் கணவனும் வாழ்ந்து வருகின்றனர்.
கொள்ளை சம்பவம்
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சம்பவதினமன்று அதிகாலை 4.00 மணியளவில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அறையின் கதவை சாத்திவிட்டு அங்கு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அதன்போது, அங்கு கதவினை திறந்து ஒருவர் நிற்பதை கண்டு கணவர் என நினைத்து அவரை அழைத்துள்ளார் ஆனால் சத்தம் எதுவும் இல்லை.
இதனையடுத்து, அறையின் மின்குமிழியை ஒளிர செய்த போது, அங்கு அரை காட்சட்டையுடன் ஒருவன் அவனது இடுப்பில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து கொண்டு தனது வாயில் கைவிரலை வைத்து சூ என (அதாவது சத்தம்போடாதே ) என கழுத்தில் வைத்து கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக்கொடியை இழுந்து அறுத்து கொண்டு அவரை கட்டிலில் தள்ளி வீழத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.
பின்னர், அவர் சத்தம் எழுப்பிய நிலையில், கணவர் வந்து காயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதனைதொடர்ந்து, தப்பி ஓடிய கொள்ளையன் அங்கு நிறுத்தி வைத்திருந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வாங்கிய புதிய சைக்கிளையும் திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அன்றைய தினம் அருகிலுள்ள வீடுகளில் வெளியில் இருந்த தாச்சி, மோட்டார் சைக்கிள் தலைகவசம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கொள்ளையனை கைது செய்ய கொக்குவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.