முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

35 வருடங்களின் முன்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158பேர்

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் என்றும் வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் அழைக்கப்படும் இனப்படுகொலை ஈழத்து மக்களின் வாழ்வில் என்றும் மறையாத வடுவாகத் தரித்துவிட்டது. கிழக்குப் பல்லைக்கழக வளாகத்தைக் காணும்தோறும் அங்கு இல்லாமல் ஆக்கப்பட்டவர்களின் அவலக் குரல் கேட்கும். இனப்படுகொலையின் குருதியால் நனைந்த ஈழத் தமிழர்களின் நாட்காட்டியில் செப்டம்பர் 5ஆம் நாள் மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்த தினமாகும்.

1990 ஆம் ஆண்டு, செப்டம்பர் 5, அன்றைய நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர்.  ஒருவரல்ல, இருவரல்ல 158பேரை இனவழிப்பு இலங்கைப் படைகள் இல்லாமல் செய்தனர். 

என்ன நடந்தது?

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த கால கட்டம் அது. இதனால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு முனைகளில் இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

35 வருடங்களின் முன்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158பேர் | 158 People Disappeared From Eastern University

இப்படியான நாட்களில் வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது.

என்றபோதும் இலங்கை இராணுவத்தினர் அகதிகளாக தஞ்சமடைந்த அப்பாவி மக்களைப் படுகொலை செய்தார்கள். இந்த நிகழ்வு குறித்து கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

“ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.”

மூடப்பட்ட அகதிமுகாம்

தஞ்மடைந்த மக்களின் பாதுகாப்பு மேலும் கேள்வி உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள மக்கள் அனைவரும் இனப்படுகொலைக்கு உள்ளாகும் அபாயத்தையும் உணர்ந்து விடுதலைப் புலிகள் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாளன்று மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறினர். இதனை அடுத்து முகாம் மூடப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய அகதிகள் காட்டுக்குள் தஞ்சம் புகுந்து அலைந்தனர். காடுகளில் மக்கள் இருந்த பகுதிகளில் விமானத்தாக்குதல்களை அரச வான்படை நடாத்தியது. இதனாலும் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர். நீண்ட அலைச்சல்களின் பின்னரே மக்கள் தங்கள் இருப்பிடம்  திரும்பினர்.

நீதி தராத அரச விசாரணை! 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.  அதில் எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ. என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர்.

35 வருடங்களின் முன்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158பேர் | 158 People Disappeared From Eastern University

இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்ட வேளையில்  வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் கைது செய்யப்பட்ட 16 பேரையும் இலங்கை இராணுவத்தினரே கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்தன. அத்துடன் குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனம்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை. அந்த விசாரணைக் குழு மக்களுக்கு நீதியையும் தரவில்லை.

ஆண்டுதோறும் நினைவு நாள் 

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 35 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது இந்த நாளை மேலும் கனத்திற்கு உள்ளாக்கிவிடுகிறது. 

35 வருடங்களின் முன்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158பேர் | 158 People Disappeared From Eastern University

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
05 September, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.