மியான்மாரில் சைபர் குற்ற நடவடிக்கைகளில் மேலும் 17 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நபர்கள் அங்கு சுற்றுலா விசாக்களில் பயணம் செய்திருந்த நிலையில், இவ்வாறு சைபர் குற்ற நடவடிக்கைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்து-மியான்மார் எல்லைக்கு அருகில், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி, கூகுள் வரைபடத்தில் “சைபர் குற்றப் பகுதி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதக் குழு
மியான்மாரின் மியாவாடி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி, ஒரு பயங்கரவாதக் குழுவால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக இதே பகுதியில் சைபர் குற்றத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் குழு ஒன்று தீவிர முயற்சிகள் மூலம் மீட்கப்பட்டிருந்தது.
ஐடி துறையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இளம் இலங்கை ஆண்களும் பெண்களும் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று சிக்கிக் கொள்வதாக மேலும் கூறப்படுகிறது.

