கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும்
‘புற்றுநோய்க்கான மருந்து’ (Cancer Cure) குறித்து, இலங்கை புற்றுநோயியல்
கல்லூரி (SLCO) தமது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது.
இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது புற்றுநோய்
நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி பகிரங்கமாக
எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக
மகேஷ் கருணாதிலக்கவுக்கு, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத்
வணிகசூரிய ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
கண்டனம்
அக்கடிதத்தில், “இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து
நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாதது குறித்து கல்லூரி மிகவும்
கவலை கொள்கிறது” என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்குழுவின் தயாரிப்பு ‘ஊட்டச்சத்து உணவுப் பொருள்’ என்று
சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விளம்பர யுக்தி குறித்து வைத்தியர் சனத்
வணிகசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதிச் சிக்கல்
“இந்த விளம்பரம், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின்
உணர்ச்சிப்பூர்வ பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்களை மிகவும் தவறாக
வழிநடத்துகிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரமற்ற சிகிச்சைகள், உண்மையான உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைத்
தாமதப்படுத்துவதுடன், நிதிச் சிக்கலை ஏற்படுத்தி, அறிவியல் மீதான
நம்பிக்கையையும் சிதைக்கும் என்று கல்லூரி தெரிவித்துள்ளது.

