கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
அத்துடன் படகின் உதவியாளராகச் செயற்பட்ட மற்றுமொருவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் சிலர் தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகு
இதேவேளை இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

