அரசாங்கம் தற்போது வரையில் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் நான்கு மக்கள் பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் உள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்தார்.
தென்னிலங்கையில் வெளியாகும் வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த நான்கு பேர் தொடர்பிலும் தற்போது விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயணம் மேற்கொள்ளும் இடங்கள், பழகும் நபர்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு உறுதி
பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் எனினும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வழங்க பொதுமக்கள் நிதியை பயன்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்றம் மற்றும் பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் ஆராய அராசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் குற்றங்களுடன் அவர்களுக்குரிய தொடர்புகள் குறித்து உருவான சமூக கருத்துக்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

