யாழ்ப்பாணம் (Jaffna)- செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக
மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.
புதைகுழிக்குள் மழைநீர் தேங்கியுள்ளது
இந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக
யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா
பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரணித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று (03) நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை
மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வு
தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



