மாகாண சுகாதர சேவை பணிப்பாளரின் வடக்கு மாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு
தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட
வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்றையதினம் (12.11.2025) இடம்பெற்றுள்ளது.
“முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேசத்தின் ஏனைய மருத்துவமனையில்
பணியாற்றும் தாதியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அரச தாதியர் வைத்திய அதிகாரிகள்
சங்கத்தின் தலைவர் செ.விஜயதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தாதிய உத்தியோகத்தர்கள் பாதிப்பு
தாதிய உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும் இல்லாத ஒரு செயற்பாட்டினை வடக்கு மாகாணத்திற்குள்
மட்டும் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தல் படி 50 ஊழியர்கள் கொண்ட
இடங்களில் அனைவருக்கும் பொதுவாக ஒரு கையெப்பம் இடும் புத்தகத்தினை
பாராமரிக்குமாறு பணித்துள்ளனர்.

இதனை நடைமுறைப்படுத்தாத சந்தர்ப்பத்தில் மேலதிக நேரக்கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த விடயம் தாதிய
உத்தியோகத்தர்களை பாதித்துள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்
தொழிற்சங்கத்தினால் வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம்
பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டும் எந்த விதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக அடையாள தொழிற்சங்க நடவடிக்கையாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.




