எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அயல் நாடு ஒன்றின் மீனவர்கள் அழித்து வரும்
நிலையில் கேள்வி கேட்க திராணி அற்றவர்களாக கூணிக்குறுகி நிக்கிறோம் என
மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ
தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை நயினாதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வடக்கு கிழக்கில் மீனவ சமூகம் சர்வதேச மீனவ தினத்தை கொண்டாடுகின்ற
நிலையில் அவர்களின் துன்பியல் வாழ்வு தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

இலங்கை கடல் சட்ட வரையறை
குறிப்பாக வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அயல்நாடு ஒன்றின் மீனவர்கள்
தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் அதனை தட்டிக்கேட்க முடியாத இனமாக
கூனிக்குறுகி நிற்கின்றோம்.
எமது மீனவர்கள் இலங்கை கடல் சட்ட வரையறைக்குள் தமது தொழில் நடவடிக்கைகளை
மேற்கொண்டுவரும் நிலையில் எமது கடல் எல்லைகளுக்குள் அயல் நாட்டு மீனவர்கள்
அத்துமீறி வருகின்றார்கள்.
இதன் காரணமாக எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படு வரும் நிலையில் மீனவ
சமூகம் தரையிலும் கடலிலும் பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டும் எல்லை
தாண்டுவது நிறுத்தப்படவில்லை.
ஆகவே எமது மீனவ சமூகம் தனக்கே உரித்தான கடலில் அயல் நாட்டு மீனவர்களின்
அத்துமீறல்கள் இல்லாமல் சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

