இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் முகநூல் பக்கத்தில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் விளைவ குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சமீபத்தில், நுகர்வோர் விவகார சபை சந்தையில் கிடைக்கும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை ஆய்வக ஆராய்ச்சிக்காக அனுப்பியிருந்தது.
எனவே, அந்த அறிக்கைகளின்படி, பெரும்பாலான சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் எனப்படும் கன உலோகம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதரசம் அளவு அதிகரிப்பு
பாதரசம் 1 பிபிஎம்-க்கு மேல் இருந்தால், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சில கிரீம்களில், இந்த பாதரச அளவு அறுபத்தாறாயிரம் வரை அதிகமாக இருந்துள்ளது. மேலும், அனைத்து வகையான சரும வெண்மையாக்கும் கிரீம்களிலும் பாதரச அளவு ஒரு பிபிஎம்-க்கும் அதிகமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இதனை அறியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக பாதரசம் செல்லும் வாய்ப்பு
இந்த பாதரசம் கொண்ட கிரீம்களை உங்கள் உடலில் தடவும்போது, பாதரசம் சருமத்தின் வழியாகச் சென்று உடலில் பாதரச அளவு அதிகரித்து, நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகங்களை மோசமாகப் பாதித்து, சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி தாய்மார்கள் இதனை பாவிப்பதன் மூலம் பிறக்காத குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக பாதரசம் செல்லும் வாய்ப்பு உள்ளதுடன், குழந்தை பிறந்த பிறகு இந்த பாதரசத்தின் பாதகமான விளைவுகளைக் காணலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தையின் பேச்சு, கேட்கும் திறன் மற்றும் செயல்பாடுகளில் நீண்டகாலக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

