எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல், நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துப்
பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளுக்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறித்த வாகனங்கள் அடிப்படை ‘வீதியில் பயணிக்கும் தகுதிச்
சான்றிதழ்’ (Roadworthiness Certificate) பெறுவதைக் கட்டாயமாக்கிப் புதிய
வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல்
ரத்நாயக்க இன்று அறிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட தகவல்
மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
அமைச்சர், இந்தத் தகுதிச் சோதனை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,
ஒவ்வொரு பஸ்ஸுக்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அவசியம் என்றும்
வலியுறுத்தினார்.

பேருந்து உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைச் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில்
பரிசோதனை செய்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரினார்.
மேலும், விபத்துகள் அல்லது வீதி சம்பவங்களின் போது பொலிஸ் விசாரணைகளுக்கு
இந்தத் தகுதிச் சான்றிதழ் மிகவும் அத்தியாவசியமானது என்றும் அமைச்சர்
குறிப்பிட்டார்.

