தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான வழக்கில்
வாழைச்சேனை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஐந்து
பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பில்
முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால்
தேடப்பட்டு வந்த வாழைச்சேனை பிரதே சபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர்,
இரண்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 4 பேர் நேற்று வாழைச்சேனை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் தொல்பொருள்
திணைக்களத்தால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப்
பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல்
குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டன என்று தெரிவித்து வாழைச்சேனை பிரதேச சபை
தவிசாளரினால் அந்தப் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்
முன்னெடுத்து வந்தனர்.
இதன் கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும்
பெயர்ப்பலகைகளை நேற்று வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில்
ஒருவரைக் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும்
இரண்டு உறுப்பினர்களைக் கைது செய்கின்றமைக்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில்
நால்வரும் முன்னிலையாகியிருந்தனர்.
வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில்
ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான
எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
பெயர்ப்பலகைகளைத் திருடியது, அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தை அதாவது ஒரு
பெயர்ப்பலகையை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற
குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றத்தின்
கவனத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கொண்டு வந்தார்.

பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொதுவழிகள் சட்டம்
அத்துடன் 1987ஆம்
ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொதுவழிகள் சட்டம் தொடர்பில்
சொல்லப்பட்டுள்ளது. வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபைகளுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை தவிசாளர் அந்தச் சட்டத்தின் கீழ்
அதிகாரமுடையவர். அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தை அகற்றினார்
என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அவருக்குக்
கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதையும்
நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கொண்டு வந்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்றே பெயர்ப்பலகை இடப்பட
வேண்டும் என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணியால் கொண்டு
வரப்பட்டபோது.
அதனைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன்
எதிர்காலத்தில் முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதாகவும், எதிர்காலத்தில்
முறையாக அனுமதி கோரும்போது அதனைச் சபையில் சமர்ப்பித்து சபையால் முறையான
அனுமதியை வழங்க முடியும் என்றும் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக
தீர்க்கலாம் என்ற காரணத்தாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பிணை
வழங்கக்கூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல
நீதிமன்றம் அனுமதித்தது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேச சபையின் முறையான அனுமதி பெறப்பட்டு
பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை
முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும்
என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
இதன்போது வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், இரண்டு
உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில்
செல்ல நீதிமன்றம் அனுதியளித்தது.
இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

