மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு
வருவதாக மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு, கட்சியின் முக்கியஸ்தர் சுரேஸ் அடாவடித்தனமாக குறித்த
நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நிகழ்வு
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் இரண்டு நாட்களில் மாவீரர் தின அனுஸ்டிப்பு இடம்பெறவுள்ள நிலையில்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்களால்
நியமிக்கப்பட்ட மாவீரர் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு அதற்கான ஏற்பாட்டு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த துயிலுமில்லங்களில் மக்களால், போராளிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என
அனைவரையும் ஒன்றிணைத்ததாக குறித்த மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு
மக்களாலேயே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு
வரும் போது இதற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு இங்கு அக்கட்சியினால் குழப்பம் விளைவிக்கப்படுவது அவர்களின்
தலைமைகளுக்குத் தெரியுமோ தெரியவில்லை, இருந்த போதிலும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் அவர்கள் அடாவடித்தனமாக குறித்த
நிருவாகத்திற்கு அச்சுறுத்தல்களை விடுகின்றார்.
அச்சுறுத்தல்
மக்களாகச் செயற்படும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று இருக்கும் போது உங்கள்
ஒத்துழைப்புகளை இதற்கு வழங்கி மக்கள் மூலமாகவே இதனை மேற்கொள்ள வைக்க வேண்டும்
என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.
அவர்களின் கட்சி ஆலோசனைப்படியே
நடக்க வேண்டும் என அச்சுறுத்தும் விதமாக நடக்கின்றார். இது தரவை
துயிலுமில்லத்தில் மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, தரவை,
தாண்டியடி என மூன்று துயிலுமில்லங்களிலும் இது நடந்துள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இதனை உணர வேண்டும். இவர்கள் ஏன் இந்த
நிர்வாகங்களை குழப்ப வேண்டும். இந்த நிர்வாகங்கள் எந்தவித ஒழிவு மறைவுமின்றி
வெளிப்படையாக இயங்குகின்றது.
இதனைக் குழப்பும் விதமாக இவர்கள்
செயற்படுகின்றார்கள்.
தரவை துயிலுமில்லத்திற்குரிய அனைத்து விடயங்களும் மக்களின் ஒத்துழைப்புடன்
பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

