மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல்
நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வேத்துச்சேனை,
வட்டவளை, நாதனைவெளி, ஓட்டடிமுன்மாரி உள்ளிட்ட பல வயற்கண்டங்களில் பல
நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு முற்றாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மண்ணுக்குள் புதையுண்ட நாற்றுக்கள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வயல்வெளிகள் அனைத்தும்
உடைப்பெடுத்து மீதமுள்ள நெல் நாற்றுக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ள இந்நிலையில்
விவசாயிகள் உடைப்பெடுத்துள்ள வரம்புகளை திருத்தி சீரமைத்து வருகின்றனர்.

வெள்ள நீர் வடிந்து கொண்டிக்கின்ற இந்நிலையில் வயல் பாதிப்புகள் தொடர்பில்
தற்போதைய நிலையில் தொலைபேசி இணைப்புக்கள் சீராக கிடைக்கப்பெறாத போதும், விவசாய
அமைப்புக்களுடாக பாதிப்பின் நிலவரங்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிக்கும்
செயற்பாடுகளை மோற்கொண்டுள்ளதாகவும், அப்பகுதி பெரும்பாக அபிவிருத்தி
உத்தியோகஸ்த்தர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வீதிகள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள்
சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான
படுவாங்கரைப் பெருநிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை-வீரமுனை
பிரதான வீதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்வீதியின் புனரமைப்பு குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்
பொறியியலாளர்கள் நேரடி கள விஜயம் மேற்கொண்டு மதிப்பீடு செய்து வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இவ்வீதி முற்றாக வெள்ளத்தில்
மூழ்கியிருந்ததனால் இவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரயாணிகள் இவ்வீதியை தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக வீதி
அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு பனிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவிக்கின்றர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவு
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிப்பு
பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 154பேர் கதிரவெளி
கனிஸ்ட வித்தியாலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச
செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும்
மாதுறுஓயா போன்ற இடங்களிலிருந்துவரும் வெள்ள நீர் காரணமாகவும் மட்டக்களப்பு
கிரான் பகுதியில் ஆற்றுவெள்ளம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியுடாக வெள்ள நீர் பாய்வதன்
காரணமாக அப்பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
கிரானிலிருந்து புலிபாய்ந்தகல் செல்வோருக்காக கிரான் பிரதேச செயலகத்தின்
ஏற்பாட்டில் இயந்திர படகு சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அவசர தேவைக்கு செல்வோரும் பல்வேறு தேவைக்கு கிரான் பகுதிக்கு வந்த மக்களும்
இயந்திர சேவையூடாக கொண்டுசெல்லும் பணிகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
முன்னெடுத்துவருகின்றனர்.
இதேநேரம் மகாவலி ஆற்று வெள்ளநீர் மற்றும் மாவிலையாறு வெள்ளநீர் பெருக்கம்
காரணமாக வாகரை கல்லரிப்பு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு
இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
கல்லரிப்பு பிரதேசத்தினை சேர்ந்த 58குடும்பங்களை சேர்ந்த 154பேர் இவ்வாறு
இடைத்தங்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட
அனர்த்தமுகாமைத்துவ நிலையமும் வாகரை பிரதேச செயலகமும் முன்னெடுத்துவருகின்றது.
வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக
12476 குடும்பங்களை சேர்ந்த 36294பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 641வீடுகள்
சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைவத்து நிலையத்தின் பிரதி பணிப்பாளர்
தெரிவித்தார்.

