முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21863 குடும்பங்களை சேர்ந்த
64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின்
நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ்
நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
பாதிப்பு விபரங்கள்
இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1312 குடும்பங்களை
சேர்ந்த 4124 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4658
குடும்பங்களை சேர்ந்த 14650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில்
5443குடும்பங்களை சேர்ந்த 17132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்
பிரிவில் 5476 குடும்பங்களை சேர்ந்த 15395பேரும், துணுக்காய் பிரதேச செயலக
பிரிவிற்குட்பட்ட 2418 குடும்பங்களை சேர்ந்த 5868பேரும், வெலிஓயா பிரதேச
செயலாளர் பிரிவில் 2556 குடும்பங்களை சேர்ந்த 6932 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (03) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40
இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதில் உறவினர் வீடுகளில் 3872 குடும்பங்களை சேர்ந்த 11184 நபர்களும்,
இடைத்தங்கல் முகாம்களில் 1186 குடும்பங்களை சேர்ந்த 3537நபர்களும் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
தொற்று நோய்களின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், சிவில் பாதுகாப்பு படையினர்,
புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சபையினர்
இணைந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில்
இன்றைய தினம் (03.12.2025) காலை ஈடுபட்டிருந்தனர்.
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்றது.
இதனால் மழை வெள்ளம் அதிகம் தேங்கி இருந்ததனால் வீதிகளில் குப்பைகள்
தேங்கியுள்ளது.
இதனால் எலிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று
நோய்களின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ், புதுக்குடியிருப்பு பிராந்திய
சுகாதார சேவைகள் பணிமனையினரின் ஒருங்கிணைப்பில் புதுக்குடியிருப்பு சிவில்
பாதுகாப்பு படையினர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினருடன் இணைந்து நகரை சுத்தப்படுத்தும்
நடவடிகையில் ஈடுபட்டிருந்தனர்.
சுத்தப்படுத்தும் நடவடிக்கையானது புதுக்குடியிருப்பு தொடக்கம் இரணைப்பாலை,
மாத்தளன் வரையானவீதி , புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான்வீதி,
புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதி, புதுக்குடியிருப்பு நகர்பகுதிகளை
அண்டிய பகுதியில் துப்பரவு செய்யும் பணி இடம்பெற்றிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.










