நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (7) மதியம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டியில் அதிக மரணங்கள்
குறித்த அனர்த்தங்களால் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அங்கு மாத்திரம் 232 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்ததாக பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், குருநாகல் மாவட்டத்தில் 61 மரணங்களும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


