நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான
வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும்
நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை இரானுவம்,பொலிஸார் மற்றும் பொது
மக்கள் இணைந்து பாரிய அர்ப்பணிப்புடன் செயப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல வீதிகளின் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ள போதிலும், கடந்த 26 ம் திகதி தொடக்கம் ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாஹலகம
கல்போக்குவ பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் முற்றாக தடைப்பட்டுள்ளன.
வீதியினை சீர்செய்யும் பணிகள்
இந்த வீதியினை சீர்செய்யும் பணி இடம்பெற்று வரும் நிலையில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருண திசாநாயக்க நேற்று 08 ஆம் திகதி வீதியினை பார்வையிடுவதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றினை
மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க கருத்து
தெரிவிக்கையில்,
நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பிரதான வீதி இதுவாகும். கடந்த
காலங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இந்த வீதி முற்றாக செயலிழந்துள்ளது.
எமது மக்களின் நிர்வாக தேவைகள் நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிகமான மக்கள்
கண்டியினை நோக்கி தான் செல்ல வேண்டும்.இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று
நீண்ட தூரம் நடந்து சென்று இருபக்கங்களிலும் உள்ள பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வீதியினை புனரமைக்க வேண்டிய தேவை மிக அதிகமாகவே
காணப்படுகின்றது
எனவே நாங்கள் இரவு பகலாக இதனை முன்னெடுப்பதற்கு தேவையான
ஒத்துழைப்பினை வழங்கி வருகிறோம்.
அதே நேரம் இந்த இடத்தில் எண் கண்முன்னேயே எம் உறவுகள் புதையுண்டனர். அவர்களின் சடலங்கள் கூட மீட்க
முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களுக்கு சமய
அனுட்டானங்களை அருகிலுள்ள கட்டடத்தில் செய்ய வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை
ஏற்பட்டதாகவும், வீதியினை மிக விரைவில் திறக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மண்ணில் புதையுண்ட பலர்
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோ
மீற்றருக்கும் அதிகமான பகுதி பாரிய மண்சரிவுக்கு உட்பட்டு புகையிரத வீதி
அங்கிருந்த வர்த்தக நிலையங்கள்,குடியிருப்புக்கள் ஆகிய மண்ணில் புதையுண்டன.
குறித்த பகுதியில் சுமார் 18 பேர் வரை மண்ணில் புதையுண்டிருக்கலாம் என ஊகம்
தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் நாவலப்பிட்டி ஊடாக கண்டி
செல்பவர்கள் இந்த பஹலகம பகுதியில் இறங்கி,சுமார் ஒரு கிலோமீற்றர்
தூரத்திற்கும் அப்பால் சென்று உலபனை பகுதியில் பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கண்டி செல்லும் நோயாளர்கள் நடந்து செல்ல முடியாததனால் அப்புகஸ்தலாவ
வீதியூடாக கம்பளை சென்று நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த வீதியினை மிக விரைவில் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக
நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

