அண்மையில் ஏற்பட்ட இயற்கை சீரழிவுகளால் நாட்டு மக்கள் பலர் நிர்க்கதியான நிலையை சந்தித்திருக்கின்றனர்.
உயிர், உடமை சேதம் என்று சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்துள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஒன்று திரள்வதை கண்கூடாக காண முடிகின்றது.
இதன்படி, பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மத குருக்கள் பலர் பொதுமக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
பௌத்த தேரரின் செயல்..
இந்த நிலையில், அண்டாவளை சுமண ஜோதி என்ற தேரர் தலைமையிலான குழுவினர், ஒரு இடத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள், ஆலயம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குறித்த பௌத்த தேரர் தலைமையிலான 100 பேர், இணைந்து ஆறு வீடுகள், ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திக் கொடுத்துள்ளனர்.
குறித்த வீடுகளில், 4 வீடுகள் கத்தோலிக்கர்களது வீடுகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த தேரர் ஒரு மாதா சொரூபத்தினை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இலங்கையை உலுக்கிய அனர்த்தங்கள், இப்படி மன நிம்மதியைத் தரும் சாதகமான மாற்றங்களையும் வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றது.

மிகப்பெரிய அனர்தம் ஒன்று நேர்ந்த பின்னர், இன, மத பேதமற்று இலங்கையர்கள் என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து எமக்காக நாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள, விகாரைகளும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் என்று அனைத்து மத ஸ்தலங்களின் கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன.
யாரும் உணவுக்காக பசித்திருக்கா வண்ணம், சமைத்த உணவுகள் உடனுக்குடன் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது போன்ற பணிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

