அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சேதமடைந்த பாடசாலைகளை மீட்டெடுப்பதற்காக கல்வி அமைச்சு (MOE) “பிரதிஷ்டா” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், குழு அல்லது தனிநபர் ஒருவர் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப பங்களிக்க முடியும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா (Nalaka Kaluwewa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கல்வி அமைச்சின் மூலம் தேவையான அனைத்து ஒருங்கிணைப்புகளையும் மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தொலைபேசி இலக்கங்கள்
இந்த விடயம் தொடர்பில் தகவல்களைத் தேடுவோர் அல்லது பங்களிக்க விரும்புவோர், 07765 823 65 மற்றும் 071 99 323 25 ஆகிய இரண்டு குறிப்பிட்ட வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கங்களுடனும் 1988 என்ற பிரத்தியேக தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புகொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கல்வி அமைச்சின் பேரிடர் மேலாண்மைக் குழுவால் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தால் நாடு முழுவதும் 1506க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் சேதம்
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் வடக்கு மாகாணத்தில் 330 பாடசாலைகளும், மேற்கு மாகாணத்தில் 266 பாடசாலைகளும், கிழக்கு மாகாணத்தில் 221 பாடசாலைகளும், மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 136 பாடசாலைகள் வீதமும், ஊவா மாகாணத்தில் 129 பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 115 பாடசலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் பட்டியல் மேலும் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

