ஸ்ரீலங்கா அரசு தமிழர் தேசத்தை அங்கீகரித்தால், இலங்கைத் தீவில் வளம்மிக்க இரண்டு தேசங்கள் வல்லமை கொண்டு உருவாகும்.
அது ஒன்றுக்கொன்று சிநேகத்தையும் வளத்தையும் பகிர்ந்துகொள்ளும் என்ற கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அன்றைக்கு முன்வைத்தார்.
அதனை ஸ்ரீலங்கா அரசு ஏற்றிருந்தால், தமிழர் தேசம்மீது போரையும் ஒடுக்குமுறையையும் நிறுத்தியிருந்தால் இலங்கையின் வரலாறு வேறுவிதமாய் எழுதப்பட்டிருக்கும்.
அன்ரன் பாலசிங்கம் , தமிழீழ தேசத்திற்கும் ஶ்ரீலங்காவுக்கும் மாத்திரமல்ல, உலகிற்கும் தேவையான இராஜதந்திரி என்பதுதான் பேருண்மையானது.
இன்று நினைவுநாள்
டிசம்பர் 14, இன்று அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள். தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஒரு ஆயுதமற்ற போராளியாக ஆனால் ஆயுதங்களுக்குச் சமமான வலிமை கொண்ட சிந்தனையாளராக விளங்கினார் அன்ரன் பாலசிங்கம்.

அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்த முக்கிய ஆளுமையே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.
1938 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த பாலசிங்கம், இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். வீரகேசரிப் பத்திரிகையில் பத்திரிகையாளராக தனது பயணத்தை தொடங்கிய பாலசிங்கம், கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்தார்.
அங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். முதல் மனைவி இறந்த பின் ஆத்திரேலியரான அடேல் ஆனை லண்டனில் காதல் திருமணம் செய்துகொண்டார்.
தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு
1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் வாழ்ந்த பாலசிங்கம் கெரில்லாப் போர் முறை குறித்த நூலை எழுதியிருந்தார்.
அதனை வாசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் இயக்கத்திற்குமான உறவு துவங்கியது.

இந்தியாவில் அப்போது பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது.
1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான பணிகளை செய்யத் துவங்கினார்.
1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.
ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.
மேற்குலகைப் புரிந்த ஆளுமை
கல்வியிலும் வாசிப்பிலும் ஆழமான ஆர்வம் கொண்ட அவர், தமிழர் பிரச்சினையை ஒரு உணர்ச்சி சார்ந்த கோஷமாக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் பிரச்சினையாக உலகிற்கு எடுத்துச் சென்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகள், சர்வதேச அணுகுமுறைகள், பேச்சுவார்த்தை நிலைப்பாடுகள் ஆகியவற்றை வடிவமைத்ததில் அவரது பங்கு அளப்பரியது.
அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்க்சியவாதியாக இருந்தவர். பின்னர் அதிலிருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் முதன்மையாக ஒருவராகவும் அன்ரன் பாலசிங்கம் விளங்கினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாதத் தன்மை, வெளிஉலகப் பார்வைத் தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கிய தலைவராக விளங்கினார்.
முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த ஆளுமையாக இவரின் முக்கியத்துவத்தை பற்றிய பிபிசி ஆய்வாளர்கள் தமது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர். “தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக தங்களைத் தீர்மானிக்கும் உரிமை உடையவர்கள்” என்ற கருத்தை உலக அரங்கில் தெளிவாகப் பதிவு செய்தவர் பாலசிங்கம்.
இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளுடன் நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் அவரது அறிவார்ந்த உரையாடல்கள், தமிழர் பிரச்சினைக்கு சர்வதேச கவனம் கிடைக்கச் செய்தன. அதாவது அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரியாக அன்ரன் பாலசிங்கம் பெயர் பதித்தார்.
தேசத்தின் குரலானார்
இன்றும் அவரது உரைகளைக் கேட்கின்றபோது பெரும் அரசியல் பாடத்தை உரைக்கும் தீர்க்கதரிசனமாக இருக்கின்றன.
அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் வெறும் வன்முறையாக அல்லாமல், ஒரு மக்கள் இனத்தின் சுய மரியாதை, அரசியல் உரிமை, வரலாற்று நீதி ஆகியவற்றின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
2006ஆம் ஆண்டில் அவரது மறைவு பின்னாட்களில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தது. அவரது இழப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
14 December, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>

