முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெருந்தேசிய வாதத்தின் அதிகாரத்தால் மலையக மக்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

பெருந்தேசிய வாதம் அதிகாரத்தில் இருக்கும் வரை மலையக மக்களுக்கு விடிவு
ஒருபோதும் கிட்டப் போவதில்லை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக
விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மலையக
மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்த கருத்திற்கு ஆதரவாக வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாற்று யோசனை

அந்த அறிக்கையில் மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், மலையக தமிழ்த் தேசிய இனத்திற்கு
தாயகம் மலையகம் தான். ஆனால் சிங்களத் தேசியம் அதனை ஏற்றுக் கொள்வதற்கு
மறுக்கின்றது. இந் நிலையில் மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை
வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக மக்களை வடக்கு கிழக்கில்
குடியேற்ற வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

கண்டி, நாவலப்பிட்டி கிரேக்ஹீட் தோட்ட அலுகொல்ல பிரிவு மக்களும் அதற்கு
சம்மதத்தை தெரிவித்துள்ளனர். இதை வெளிப்படுத்தும் காணொளியினை பலர்
பகிர்ந்திருக்கின்றனர். வடக்கு – கிழக்கில் இதற்கு மாபெரும் ஆதரவு
தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைத்தளங்களில் ஆதரவுக் கருத்துக்கள் வந்து
கொண்டிருக்கின்றன. ஆறு திருமுருகன் கோவில் காணிகள் பல இருக்கின்றன.

பெருந்தேசிய வாதத்தின் அதிகாரத்தால் மலையக மக்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் | Upcountry Persons Life

அதில்
குடியேற்ற தயார் எனக் கூறியிருக்கின்றார்.
வடக்கு – கிழக்கில் தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் காணிகள்
பல கவனிப்பாரற்று இருக்கின்றன. அவர்கள் சம்மதம் தெரிவித்தால் அங்கு
குடியேற்றலாம் என மனோகணேசன் கூறியிருக்கின்றார்.

வடக்கு – கிழக்கில் தனியார் காணிகளைத் தவிர அரச காணிகளும் ஏராளமாக
இருக்கின்றன. மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக மலையகத்தில் வசிக்கின்ற
போதும் இன்னமும் காணியுரிமையோ, வீட்டுரிமையோ வழங்கப்படவில்லை.

200
வருடங்களுக்கு மேலாக காணிகளற்று இருக்கின்றார்கள் என்றால் அது மலையக
மக்களாகத்தான் இருக்க முடியும.

வேலைவாய்ப்புக்கும் போதிய உத்தரவாதம் இல்லை. சம்பளமும் மிகக் குறைவு. அடிமை
முறை உலகில் ஒழக்கப்பட்ட போதும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் அரைகுறை அடிமை
வாழ்க்கை வேறு. போதாக்குறைக்கு வருடம் தோறும் இயற்கை பேரிடராக மண்சரிவு
அனர்த்தங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

தாங்களாகவே குடியேறிய நிலை

இந்நிலையை தொடர்ந்து அனுமதிக்க
முடியாது.
மலையக மக்களை வடக்கு – கிழக்கில் குடியேற்றுவது என்பது வரலாற்று ரீதியாக
நடைபெற்று வருகின்ற ஒன்றுதான். 1977ஆம் ஆண்டு இனக் கலவரத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களை “காந்தீயம்” நிறுவனம் இவ்வாறு குடியேற்றியிருந்தது.
மலையக மக்கள் வேலைவாய்ப்புக்காக தாங்களாகவே குடியேறிய நிலையும் உண்டு.

கிளிநொச்சி, வவனியா மாவட்டங்களில் இவ்வாறு குடியேறிய மக்கள் பலர்
வசிக்கின்றனர். அவர்களில் பலர் நல்ல நிலையில் வாழ்கின்றனர். நிலவுரிமையோடு
கல்வியிலும் சிறப்புற்று விளங்குகின்றனர். பலர் மருத்துவர்களாக,
பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, அதிபர்களாக, வேறு அரசாங்க உத்தியோகத்தர்களாக,
ஊடகவியலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பான்மை
மலையக மக்கள் எனக் கூறலாம். வவுனியா நகரப் பகுதி இன்று தமிழர்கள் வசமாக
இருக்கின்றது என்றால் அதற்கும் காரணமாக மலையக மக்களே விளங்குகின்றனர்.
ஆயுதப் போராட்டத்திலும் அவர்களது பங்கு அளப்பரியதாக இருந்தது. கிளிநொச்சி
மாவட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்களின் உடல்கள் அதிகமாக
புதைக்கப்பட்டுள்ளன. பலர் முக்கிய தளபதிகளாகவும் இருந்திருக்கின்றனர் எனினும்
அரசியல் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு போதியளவு வழங்கப்படவில்லை என்ற
குற்றச்சாட்டு உண்டு.

வன்னி மாவட்டத்தில் ஒரு தடவை பாலச்சந்திரன் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக
புளட் இயக்கத்தின் சார்பில் வந்திருக்கின்றார். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண
சபையில் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் வந்திருக்கின்றார். வரதராஜப்பெருமாள்
1970 களில் தமிழ் இளைஞர் பேரவையிலும் பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்திலும்
முக்கியஸ்தராக இருந்திருக்கின்றார். விடுதலைப் போராட்டத்தில் பங்கு
பற்றியமைக்காக சிறைவாசமும் அனுபவித்திருக்கின்றார்.

பெருந்தேசிய வாதத்தின் அதிகாரத்தால் மலையக மக்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் | Upcountry Persons Life

அரசியல் பிரதிநிதித்துவம்

மட்டக்களப்பு சிறை
உடைப்பின் போது சிறையிலிருந்து தப்பி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியிருக்கின்றார். 1985ஆம் ஆண்டு பூட்டான்
தலைநகர் திம்புவில் திம்பு மாநாடு இடம்பெற்றபோது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் பிரதிநிதியாகவும் பங்கேற்றிருந்தார். திம்பு கோரிக்கையின் முக்கிய
பிதாமகனும் இவரேயாவர்.
மலையக வம்சாவழியினர் இவ்வாறு அரசியல் பிரதிநிதித்துவத்தை வகித்த போதும் அது
போதுமெனக் கூற முடியாது.

மாகாண சபைகளிலும் பெரியளவிற்கு பிரதிநிதித்துவம்
கிடைக்கவில்லை. உள்ளூராட்சிச் சபைகளில் மட்டும் கணிசமான பிரதிநிதித்துவம்
கிடைத்திருக்கின்றது. இந்த குறைபாட்டை மலையக பிரதிநிதிகள் பலர்
சுட்டிக்காட்டியிருந்தனர். இது தவிர மலையக மக்களை எல்லை புறங்களில்
குடியேற்றுவதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். மலையக மக்களை ஆபத்தான
பகுதிகளில் குடியேற்றுகின்றனர் என்றே அவர்களது குற்றச்சாட்டு வந்திருந்தது.

மலையக மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் மலையகத்தில் உள்ளபோதும் மலையகம்
அவர்களினால் உருவாக்கப்பட்ட தாயக பூமியாகும். “மலையகம் எமது தாயகம் நாம் ஓர்
தேசியம்” என்ற கோசங்களும் அவர்களினால் முன்வைக்கப்படுகின்றது. அந்த பூமி தான்
அவர்களுக்கு தேசிய இன அடையாள அந்தஸ்தினையும் கொடுக்கின்றது. பெருந்தோட்டத்துறை
பொருளாதாரம் தேசிய இனத்திற்கேயுரிய அடிப்படை பொருளாதார அந்தஸ்தினையும்
வழங்குகின்றது.

இதனால் எத்தகைய ஒடுக்கு முறைகள் வந்தாலும், இயற்கைப் பேரிடர்
வந்தாலும், அந்தப் பூமியில் அவர்கள் வாழ்வதே பொருத்தமானது என்ற வாதமும்
மலையகக் கல்வியாளர்களினால் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாக மத்திய மலைநாட்டு மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, கண்டி,
இரத்தினபுரி மாவட்டங்களில் அவர்கள் செறிவாக வாழ்கின்றனர். நாடாளுமன்ற, மாகாண
சபை பிரதிநிதித்துவத்தையும் அங்கு பெற்றிருக்கின்றனர். இந்த மாவட்டங்கள் தான்
அவர்களுக்கு தேசிய அந்தஸ்தையும் வழங்கியிருக்கின்றது.

எனவே இந்த
மாவட்டங்களிலிருந்து வெளியேறுவது பொருத்தமானதாக இருக்க மாட்டாது.
எனவே இவற்றைத் தவிர்த்து மலையக மக்கள் வாழ்கின்ற மாவட்டங்களிலிருந்து அவர்களை
வடக்கு – கிழக்கில் குடியேற்றுவது பற்றி யோசிக்கலாம். குறிப்பாக களுத்துறை,
மாத்தறை, காலி, குருநாகல், மொனராகலை, கேகாலை, மாத்தளை மாவட்டங்களில் வசிக்கும்
மலையக மக்களை வடக்கு – கிழக்கில் குடியேற்றுவது பற்றி யோசிக்கலாம். இம்
மாவட்டங்களில் மலையக மக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து சிங்களவர்களாக மாறி
வருகின்றனர்.

வடக்கு – கிழக்கில் குடியேற்றம்

பெருந்தேசிய வாதத்தின் அதிகாரத்தால் மலையக மக்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் | Upcountry Persons Life

அவர்கள் ஒன்றில் மத்திய மலை நாட்டில் குடியேற வேண்டும் அல்லது
வடக்கு – கிழக்கில் குடியேற வேண்டும். மத்திய மலை நாட்டில் குடியேறுவது
கடினமான ஒன்றாகும். எனவே அவர்கள் தமிழ் அடையாளத்தை பேண வேண்டுமாக இருந்தால்,
நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமாக இருந்தால் வடக்கு – கிழக்கில்
குடியேறுவதே பொருத்தமானதாக இருக்கும். மத்திய மலை நாட்டிற்கும் அவர்கள்
கிடைக்காமல் வடக்கு கிழக்கிற்கு கிடைக்காமல் இருக்கின்ற நிலையை ஒருபோதும்
உருவாக்கக் கூடாது.

இது அவர்களது அடையாளங்கள் அழிந்து போவதற்கே வழி செய்வதாக
இருக்கும்.

பெருந்தேசிய வாதம் அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களுக்கு விடிவு ஒருபோதும்
கிட்டப் போவதில்லை. அதேவேளை மத்திய மலை நாடு போல அவர்களினால் தங்கள்
உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடவும் முடியாது.
மலையக மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதாயின் அதற்கான கொள்கைத்
திட்டங்களையும், வேலைத் திட்டங்களையும் முன்கூட்டியே வகுத்துக் கொள்வது
அவசியம். கொள்கை ரீதியாக மலையக மக்கள் சமதரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுதல்
வேண்டும். தாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் குடியேறும் மலையக
மக்களுக்கு இருக்கக் கூடாது.

தமிழ் அரசியல் தொடர்பான போதிய விழிப்பையும்
அவர்களுக்கு ஊட்ட வேண்டும். மத்திய மலைநாட்டில் வசிக்கின்ற மலையக மக்கள்
வடக்கு, கிழக்கின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொண்டிருக்கின்ற அளவுக்கு
வாழ்கின்ற மலையக மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் எனக் கூற முடியாது.
தவிர குடியேற்றப் பணிகளைச் செய்வதற்கான வழி வரைபடமும் தேவை. முடிந்தால் இந்திய
அரசின் உதவியையும் இதற்கு நாடலாம்.

மலையக மக்களை தமிழ் அடையாளத்துடன் வாழவிடும் பொறுப்பு இந்தியாவிற்கும்

உண்டு.

வழிவரைபடத்தில் மலையகத்திலிருந்து இவ்வாறு குடியேற
விரும்புகின்றவர்களை அடையாளம் காணுதல், பொது நிதியம் ஒன்றினை உருவாக்குதல்.
பொருளாதார வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் வழங்குதல், வீடுகளைக் கட்டிக்
கொடுத்தல், சொந்தக் காலில் நிற்கும் வரை நிவாரணம் வழங்குதல், கல்வி வசதிகளை
வழங்குதல் என்பன முக்கியமானவையாகும். பொது நிதியம் ஒன்றை உருவாக்குவது
தொடர்பில் புலம்பெயர் மக்களையும் உள்ளூர் மக்களையும் அணுகலாம்.

மனோகணேசன் மலையக மக்களை வடக்கு – கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்ற கருத்தை
ஒரு அரசியல் வெடிகுண்டாகவே பயன்படுத்தியிருக்கின்றார். பொருத்தமான நேரங்களில்
அரசியல் வெடிகுண்டுகளை வீசுவதில் மனோகணேசன் வல்லவர். முகத்திற்கு நேரே
வெட்டான்று துண்டு இரண்டாக பேசும் சுபாவம் அவருடையது.
இந்தியத் தலைவர்களிடம் “சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியா மலையக
மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது” என்று நேரடியாகவே கூறினார்.

குடியேற்றம்

“இந்தியா முழு
மலையக மக்களையும் இந்தியாவிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது முழு
மலையக மக்களையும் இலங்கையில் வாழ்வதற்கு வழிவிட்டிருக்க வேண்டும். ஒரு பகுதி
மக்களை கொண்டு சென்று இன்னொரு பகுதி மக்களை விட்டதன் மூலம் மலையக மக்களை
இந்தியா பலவீனப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறியிருக்கின்றார். இந்தியாவிலும்
ஒரே இடத்தில் அவர்களை குடியேற்றுவதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் அவர்களை
சிதறி குடியேற்றியது அவர்களின் கூட்டு வாழ்க்கையையும் இல்லாமல் செய்துள்ளது.

பெருந்தேசிய வாதத்தின் அதிகாரத்தால் மலையக மக்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் | Upcountry Persons Life

ஒரு அரசியல் சக்தியாக அவர்களினால் மேலெழ முடியவில்லை.
பிரித்தானியத் தலைவர்களிடம் “மலையக மக்கள் விவகாரத்தில் பிரித்தானியா
பொறுப்புடன் நடக்கவில்லை” எனக் கூறியிருக்கின்றார். மலையக மக்களை இலங்கையில்
குடியேற்றிய பிரித்தானிய அரசிற்;கு அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய
பொறுப்பும் இருக்கின்றது. பல நாடுகளில் பிரித்தானியா இந்தப் பொறுப்பை
மேற்கொண்டு குடியேறியவர்களின் வாழ்வை மேம்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில்
மட்டும் அநாதையாக கைவிட்டிருக்கின்றது. உண்மையில் பிரித்தானியா இதற்கு மலையக
மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தொடர்ந்து இழப்பீட்டை வழங்க வேண்டும்.
200 வருடங்கள் சென்ற பின்னரும் மலையக மக்கள் அரச நிர்வாகத்துடன்
இணைக்கப்படாமல் நிலமற்று, வீடற்று இருக்கின்றார்கள் என்றால் அதற்குப்
பிரித்தானியாவே பொறுப்பாகும்.
அதேவேளை சிங்களத் தலைவர்களிடம் “இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டி
பொருளாதாரத்தைப் பாதுகாத்த மலையக மக்களிடம் சிங்களத் தலைவர்கள் நன்றியுணர்வைக்
காட்டவில்லை” எனக் கூறியிருக்கின்றனர்.

மனோகணேசனின் வெடிகுண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நோக்கித்தான்
வீசப்பட்டது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசாசங்கத்திற்கு உண்டு.
ஒன்றில் பாதுகாப்பான காணிகளை மலையக மக்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வடக்கு
– கிழக்கில் குடியேற வழி செய்ய வேண்டும்.

இதில் அதிகம் சங்கடப்படுபவர்கள்
தேசிய மக்கள் சக்தியின் மலையகப் பிரதிநிதிகள் தான்.
மலையக மக்களுக்கு மிகப்பெரிய மார்ஷல் திட்டம் அவசியம். இரண்டாம் உலக
யுத்தத்தில் படுமோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளை மேம்படுத்துவதற்கு
உருவான திட்டம் தான் மார்ஷல் திட்டமாகும். இதே போன்றொரு திட்டம் மலையக
மக்களுக்கு அவசியம். இதில்லாமல் மலையக மக்களை தொடர் அழிவிலிருந்து பாதுகாக்க
முடியாது.
மொத்தத்தில் மலையக மக்களை நேசிப்பவர்களுக்கு பல பணிகள் காத்திருக்கின்றன என்றே
கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.