தொழில்நுட்பக்கோளாறு காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய துருக்கிய எயார்லைன்ஸ் விமானம் TK733, நாளை (18) இரவு 10.00 மணிக்கு துருக்கியின் இஸ்தான்புல்லுக்குப் புறப்பட உள்ளது.
துருக்கிய எயார்லைன்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இதனை தெரிவித்துள்ளது.
இருப்பினும், விமானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்
கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு நேற்றிரவு செல்லவிருந்த TK 733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றிக் கொண்டு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், முழுப்பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாக, விமானத்தின் எடையை குறைக்க சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக நடுவானிலேயே பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, விமானம் நள்ளிரவில் பாதுகாப்பாக தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





