அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் கடுமையாக சேதமடைந்த கிழக்கு தொடருந்து பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு, இன்று (20) முதல் பயணிகள் தொடருந்து சேவைகள்
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நேரடி தொடருந்து சேவை இன்று காலை 7:00 மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்பட்டு கல் ஓயா மற்றும் மாகோ ஊடாக கொழும்பு கோட்டையைச் சென்றடையும்.
தொடருந்து போக்குவரத்து முழுமையாக பாதிப்பு
கடந்த மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு தொடருந்து
பாதையின் பல இடங்கள் சேதமடைந்தன. இதனால் கடந்த 22 நாட்களாக பயணிகள் தொடருந்து
உட்பட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த திணைக்களத்தின் துரித நடவடிக்கையினால் 22 நாட்களுக்குள் தொடருந்து பாதை
சீரமைக்கப்பட்டு, இன்று முதல் தினசரி தொடருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில நாட்களுக்கு முன்னரே, திருகோணமலையில் இருந்து சீனக்குடா துறைமுகத்திலுள்ள
பிரிமா (Prima) நிறுவனத்தின் மாவு பொதிகளை ஏற்றிச்செல்லும் சரக்கு தொடருந்துகள்
இயங்க தொடங்கியுள்ளன.
தற்போது பயணிகள் சேவையும் இணைந்திருப்பதால் கிழக்கு
மாகாண தொடருந்து போக்குவரத்து முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளது.

