கல்லுண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் பல அடிப்படை வசதிகள் கூட
நிவர்த்தி செய்யப்படாத நிலையில் தினம் தினம் அவலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுகாதார சீர்கேடு, தண்ணீர் பிரச்சினை, வெள்ள அனர்த்தம், வெள்ளத்தால் விஷ
ஜந்துக்கள் வீட்டுக்குள் வந்து அங்கு உள்ளவர்கள் மீது தீண்டுகின்றமை, அருகில்
உள்ள யாழ். மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் குப்பைமேடுகள்
தொடர்பான பிரச்சனைகளை அன்றாடம் எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் வயிற்றோட்டம்,
வாந்திபேதி, காய்ச்சல், தோல் தொடர்பான நோய்கள் என பல்வேறு விதமான நோய்களையும்
எதிர்கொள்கின்றனர்.
பல போராட்டங்கள்
இந்த பிரச்சினைகளுக்கு எதிராக இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டங்கள்
செய்துள்ளனர், ஆனால் எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில்
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் ஒரு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
அதாவது, தமக்கு பல நாட்களாக பிரதுச சபையின் தண்ணீர் வழங்கவில்லை என்று
போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அந்த மக்களின் நிலையை இழிவுபடுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேச சபையின்
தவிசாளர் கூறிய பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
காசு கட்டாத ஆட்களுக்கு கொடுக்கேலாது
இந்நிலையில் இது தொடர்பில் தவிசாளர் வெளியிட்ட கருத்துக்கள் விமர்சிக்கத்தக்கதாய் இருந்துள்ளது.
”பிரதேச சபையால் கொடுக்கின்ற தண்ணீருக்கு லீட்டருக்கு 50 சதவீதம்படி கட்டணம்
செலுத்த வேண்டும். அங்கே ஒரு மாதமாக கட்டணம் செலுத்தாமல் இருக்கின்றனர்.
காசு
கட்டாத ஆட்களுக்கு தண்ணீர் கொடுக்கேலாது என்று நாங்கள் கூறிவிட்டோம். இனி
பிரதேச சபையினர் என்றால் யார் என்று பார்ப்போம்.
தண்ணீர் இணைப்பு வழங்குவதற்கு கதைத்துவிட்டோம். அது வந்த பின்னர் அங்கு
பலருக்கு தண்ணீர் கிடைக்காது. ஏனெனில் அவர்கள் கட்டணம் செலுத்த மாட்டார்கள்.
அந்த நேரத்தில் எல்லோரும் நடு ரோட்டில் நிற்பார்கள். அப்போது வருவார்கள் தானே
பிரதேச சபையிடம், அப்போது பார்ப்போம்.
கல்லுண்டாய் பகுதி மக்களுக்கு இரவு பகலாக நாங்கள் தண்ணீர் கொடுக்க, தண்ணீர்
கொடுக்கவில்லை என்று அவர்கள் எனக்கு எதிராக போராட்டம் செய்கின்றார்கள்.
24ஆம்
திகதியில் இருந்து தண்ணீர் கிடைக்கவில்லை என்று பச்சை பொய் கூறுகின்றனர்.
போராட்ட களத்திற்கு எனக்கு வரவும் விருப்பம் இல்லை.
கல்லுண்டாய் குடியேற்றத்திட்டத்தில் இருக்கும் எல்லோருக்கும் வெவ்வேறு
பகுதிகளிலும் வீடுகள் உள்ளன. அவர்களின் ஜாதகங்கள் முதலே எனக்கு தெரியும்.
எல்லா வரலாறுகளும் எனக்கு தெரியும். நானும் கடும் உளவு, எனக்கும் எல்லா
இடத்திலும் ஆட்கள் இருக்கின்றனர்.
என்.பி.பியின் தூண்டுதலால் மக்கள் இவ்வாறு செய்கின்றனர்.
வழக்கு தாக்கல்
கல்லுண்டாய் போராட்ட
இடத்திற்கு வந்த ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.
போராட்ட களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர் கந்துவட்டிக்காரர்.
கல்லுண்டாய் போராட்ட களத்தில் முதல்நாள் ஒரு சூட்டிங் செய்தார்கள். பின்னர்
இரண்டாவது நாள் வேறொரு உடை போட்டுக்கொண்டு சூட்டிங் செய்தார்கள்.
அங்கு
இருப்பவர்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை.
இனித்தான் எல்லோருக்கும் தெரியும் தவிசாளரின் திட்டம். நாடாளுமன்றத்தில் தேசிய
மக்கள் சக்திக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதுபோல எங்களது சபையில் எனக்கு
அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது.
DTNA, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய
இரண்டு கட்சிகளும் கூறிவிட்டார்கள் நான்கு வருடங்களுக்கு எங்களை சபையில்
எதிர்க்க மாட்டோம் என்று. இனி அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி தானே பிரதேச
சபையில் என்ன நடக்கும் என்று அப்போது பாருங்கள்” என அச்சுறுத்தும் வகையில்
கூறியுள்ளார்.

