தமிழர்களின் வரலாற்றுமிக்க பூமியாக காணப்பட்ட திருகோணமலை- கன்னியா
வெந்நீரூற்றும் அதன் வளாகத்தில் உள்ள இந்து கோயில்களும் தற்போது
ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இலங்காபுரி வேந்தன் இராவணனுடன் தொடர்புபட்டதும் ஆன்மீக உலகின் அதிசயம் எனப்
போற்றப்படும் ஏழு வெந்நீருற்றுக்களை கொண்டதும் தட்ஷன கைலாச புராணம் வீரசிங்கா
புராணம், திருகோணாசல புராணம் போன்ற பல்வேறு புராணங்கள் விதந்துரைக்கப்பட்ட
பெருமை கொண்டதும் அகத்தியமாமுனியின் மனம் கவர்ந்த புண்ணிய தளங்களை கொண்டதுமான
இடமாக கன்னியா தமிழர் தாயகத்தின் பூமி என இருந்து வந்தது.
ஆனாலும் தற்போதைய சூழ் நிலையில் தொல்பொருள் என்ற போர்வையிலும்
பௌத்தமயமாக்கலின் ஆதிக்கமும் சைவத்தமிழர்களின் மத அனுஷ்டானங்களை அங்குள்ள
கோயில்களில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பௌத்தமயமாக்கல் மூலமாக அங்குள்ள பகுதியில் புத்தர் சிலையை நிருவி, தமிழர்களின்
அடையாளங்களை கூறுபோடும் நிலை உருவாகியுள்ளது. குறித்த வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்றும்
திறப்பதற்கு தயாராகி வருவதாகவும் அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் இங்கு பல மதச்சடங்குகளை நடாத்தி வழிபாட்டில் ஈடுபடக்கூடிய
நிலை இருந்த போதிலும் அந்த நிலையும் இங்கு இல்லாமல் ஆக்கப்பட்டதாக
தெரியவருகிறது.
இறந்தவர்களுக்கான பித்ரு கடன் செய்யும் இடமாகவும் இருந்த கன்னியா பகுதியில்
அண்மையில் இந்த நிகழ்வு செய்ய முடியாது என பல்வேறு தடைகளை ஏற்படுத்திய வரலாறுகளும்
உண்டு. மதச் சுதந்திரம் இந்த நாட்டில் எல்லா மதங்களுக்கும் சமம் என கூறுகின்ற
போதும் எந்த அரசாங்கமும் முழுமையான சுதந்திரத்தை வழங்கவில்லை என்றே கூற
முடியும். சுமாராக 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவில், சிவன் கோயில்களும் உள்ளன.

இவ்வாறான நிலையில் அங்குள்ள கோயில்களுக்கு சென்று மதக் கடமைகளை செய்ய முடியாது
பௌத்த ஆதிக்கம் காரணமாக பல்வேறு இழப்புக்களை சந்திக்க வேண்டியுள்ளது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட குறித்த பகுதி சுற்றுலாப்
பிரதேசம் எனவும் தொல்பொருள் என்ற போர்வையிலும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக
பராமரிக்கப்பட்டு உள் நுழைவு டிக்கட்டுக்களை அவர்களின் கட்டுப்பாட்டிற்குல்
வைத்துள்ளனர்.
தமிழர்களின் ஆதங்கம்
யதார்த்த பூர்வமாக பார்க்கின்ற போது உப்புவெளி பிரதேச சபைக்கே சொந்தமானதாகவும்
அதன் கீழ் தான் பராமரிப்பும் இடம் பெற வேண்டும். இவ்வாறான நிலையில் இது குறித்து திருகோணமலை தென்கைலை ஆதீனம் அகத்தியர்
அடிகளார் தெரிவிக்கையில் ” கன்னியா யாருடையது யாருடன் சம்மந்தப்பட்டது அதன்
சூழ் நிலைமை என்பது எல்லோருக்கும் தெரியும். சைவத்துடனும்,தமிழுடனும் உள்ள
தொடர்பும் எல்லோருக்கும் தெரியும். எல்லாம் தெரிந்தும் இப்படியான விடயங்கள்
நடந்து கொண்டிருக்கிறது.

இதனை தனிப்பட்ட முறையில் யாரும் எதுவும் செய்ய
முடியாது. சைவ சமூகம் மற்றும் தமிழ் சமூகம் சேர்ந்து தான் இதனை மீட்டெடுக்க
முன்வர வேண்டும். அதற்கு தலைமை தாங்கும் தலைமைத்துவம் இது சம்மந்தமாக
சிந்திக்கின்றதா என்பது பற்றி தெரியாது. சிந்தித்து இதனை வென்றெடுக்க என்ன
செய்யலாம் என்பது பற்றியும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
யாருடன் அணுக
வேண்டும். எப்படி அணுக வேண்டும் என்பதை அரசியல் தலைமை தீர்மானிக்க வேண்டும்.
இது பற்றியதான தீர்மானங்களை எடுப்பதாக எதுவும் தெரியவில்லை.கட்டாயமாக எமது
இதனை மீட்க முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும் இல்லாது போனால் நாங்கள் இன்னும்
சில காலங்களில் காணாமல் போய்விடுவோம். எங்களால் எடுக்கப்படும்
முன்னெடுப்புக்களுக்கு நாங்கள் துணை நிற்கலாம்.சரியான உண்மையான விடயங்களுக்கு
துணை நிற்போம். எனவே தான் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும்,கடமையும் அரசியல்
தலைமைகளுக்கு இருக்கிறது.இதனை அவர்கள் செய்ய வேண்டும் ” என கூறினார்.
இது போன்ற பல போராட்டங்கள் நீதிமன்ற தடைகள் வழக்குகள் என இந்த
விவகாரத்தில் இழுபட்டு கொண்டு செல்கிறது. அவ்வப்போது விசேட பூஜை வழிபாடுகள்
பித்ரு கடன் நிகழ்வுகளை கூட செய்ய முடியாத அளவுக்கு சிவ பூமி
அபகரிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தின் பின்னரான நகர்வுகள் பாரம்பரிய
தமிழர்களின் பூமிகள் வடகிழக்கில் இவ்வாறு சிறுபான்மை சமூகங்களை முன்வைத்து
கபளீகரம் செய்யப்படுகிறது.

கடந்த கால நல்லாட்சி அரசாங்கம் தொடக்கம் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தற்போதை
அநுர அரசாங்கம் வரை நிரந்தர தீர்வின்றிய நிலை காணப்படுகிறது.
மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு அனைவரும் நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழ
வேண்டிய சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இனப் பிரச்சினைக்கான
தீர்வின்றியதை போலவே காலம் கடத்தும் நிலை கன்னியா விவகாரமும் உள்ளது.
இது பற்றி கன்னியா பிரதேசவாசியும் திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை உறுப்பினருமான பிலிப் ஜோன் வி ஷோபா தெரிவிக்கையில் “சிவ பூமீ, இராவணதேசம் என
வரலாற்று சிறப்புப் பெயர் கொண்டதும் கிழக்கிலங்கையின் தலைநகராகவும் விளங்கும்
திருகோணமலை இயற்கை வளத்துடன் சேர்ந்து அரசியல், புவியியல் முக்கியத்துவம்
கொண்ட கேந்திர நிலையமாகும்.
சுற்றுலாத்துறை வளர்ச்சி
திருகோணமலையை பொருத்தவரையில் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்லாது
தமிழர்களின் பாரம்பரியத்தின் கோட்டை என்றே சொல்லலாம்.
இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட திருகோணமலை அதிகளவான சுற்றுலா பயணிகளை
கவர்ந்துள்ளது.

அந்தவகையில், கன்னியா வெந்நீரூற்று அதன் தனிச் சிறப்பால்
அதிகளவிலான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
இலங்கையில் 10 இற்கும் மேற்ப்பட்ட இடங்களில் வெந்நீரூற்றுகள் இருக்கின்றன.
ஆனால் கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீரூற்றானது இயற்கையானது மட்டுமல்லாது
தமிழர்களின் தொன்மைக்கு சான்று பகரும் வரலாற்று சின்னமாகும். தற்போது இது
திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.
நீண்டகாலமாக உப்புவெளி பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த கன்னியா
வெந்நீரூற்றானது, யுத்தம் முடிவுற்ற பின்னர் 2010 ம் ஆண்டு திட்டமிடப்பட்டு
தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
தமிழர்களிடமிருந்து
பறிக்கப்பட்டது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.
தமிழர்களின் வழிப்பாட்டு ஸ்தலமான பழமையான சிவனாலயம் பூட்டப்பட்டதுடன்
பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டது.
அத்தோடு அநுராதபுர ஆட்சிக்காலத்தை சேர்ந்த பௌத்த இடிபாடுகளை கொண்ட இடமாக
தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவபக்தனான தமிழ் மன்னன் இராவணனுடன் தொடர்புடைய இந்துக்களின் வரலாற்று
ஸ்தலத்திற்கு பௌத்த சாயம் பூசப்பட்டுள்ளது.
இராவணன் தனது தாயாருக்கு ஈமகிருகைகள் செய்த இடமாக கன்னியா வெந்நீரூற்று
தொடர்பாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை பின்பற்றி காலம் காலமாக
இந்துக்கள் தங்களது இறுதி கிரிகைகளை கன்னியா வெந்நீரூற்றில் மேற்கொண்டு
வந்தனர்.அதற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது.
ஈமக்கிரிகைகள் செய்வதற்கு சென்ற சைவசமய மதகுரு தாக்கப்பட்டதுடன் மக்களும்
விரட்டியடிக்கப்பட்டனர்.
இவ்வாறு தமிழர்களின் பாரம்பரியம், வரலாறு, தொன்மை என அனைத்தும்
பேரினவாதிகளால் திட்டமிட்டு சூறையாடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் விசனம்
இவ்வாறு தமிழர்களிடமிருந்து
அடாத்தாக அபகரிக்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்று இன்று கேட்பாரற்று கிடக்கிறது.
சுற்றுலா பயணிகளின் மூலம் வரும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொல்பொருள்
திணைக்களம் வெந்நீரூற்றினை முறையாக பராமரிக்கவில்லை. கிணறுகள் மற்றும் கிணற்றை
சுற்றிய தரைப்பகுதிகள் பாசிகள் படிந்து காணப்படுவதுடன் மலசலக்கூடம் மற்றும்
பெண்களுக்கான உடைமாற்றும் அறைகள் என்பனவும் இல்லை என சுற்றுலா பயணிகள் விசனம்
தெரிவிக்கின்றனர்.
கன்னியா வெந்நீரூற்றினை மீட்டும் உப்புவெளி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ்
கொண்டுவர வேண்டும் என பிரதேச சபையினால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு
கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் இன்னும் இதற்கான தீர்வு
வழங்கப்படவில்லை.

கிளின் ஸ்ரீலங்கா, வளமான நாடு அழகான வாழ்கை என திட்டங்களை செயற்படுத்தும்
தற்போதைய அரசாங்கம் கன்னியா வெந்நீரூற்றினை மீண்டும் உப்புவெளி பிரதேச
சபையிடம் கையளிக்குமா?
தமிழர்களின் பாரம்பரியம் மீட்கப்படுமா? எனவும் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இப்படியாக தமிழர்களின் வரலாறுகளை கூறும் பல
நிலங்கள், தனியார் காணிகள், மதஸ்தலங்கள்என அரச படையினர், அரச திணைக்களம், பௌத்த
பேரினவாதிகளின் அட்டகாசத்துடன் அபகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் அரசியல் தலைமைகள் இது விடயத்தில் ஒன்றுபட்டு மக்கள்
நலனுக்காகவும் மதச் சுதந்திரங்களுக்காகவும் தமிழ் பாரம்பரிய வரலாற்றை
பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு,
21 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>

