யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விஹாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விஹாரைக்கு முன்பாக நேற்று (21) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தையிட்டி விகாரை பிரச்சினை
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவியிடம் ஊடகமொன்று வினவிய போது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், விஹாராதிபதிக்கு பௌத்த கலாசாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழே வழங்கப்படுகின்றது.
அது பாடசாலை உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுவது போன்ற பதவி உயர்வு அல்ல. அத்துடன் தையிட்டி விகாரை பிரச்சினையையும் விஹாராதிபதிக்கு வழங்கப்படும் சான்றிதழ் நிகழ்வையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம்.
விகாரைக்குச் சொந்தமான காணி
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகள் குறித்து எமது அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய, விகாரைக்குச் சொந்தமான காணிகளை விகாரைக்கு வழங்குவதற்கும் ஏனைய காணிகளை உரிய மக்களிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என தெரிவித்தார்.

