வடக்கு மாகாண விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் இரணைமடுக் குளத்தைப்
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில்
சென்று பார்வையிட்டார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம்(21.12.2025) மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர்
முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவான கலந்துரையாடலில் பிரதமர்
ஈடுபட்டார்.
சீரற்ற காலநிலை
இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுபோக மற்றும்
பெரும்போக பயிர்ச்செய்கைகள் குறித்தும், விவசாயிகளின் நீர்த் தேவைகள்
குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

அத்துடன், குளத்தை நம்பி மேற்கொள்ளப்படும் நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும்
மீனவர்களின் வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் விளக்கமாகக்
கேட்டறிந்து கொண்டார்.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களின்போது குளத்தின்
பாதுகாப்பு குறித்தும், நீர் முகாமைத்துவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர
நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் அதிகாரிகளிடம் விலாவாரியாகக் கேட்டறிந்தார்.
குடிதண்ணீர் தட்டுப்பாடு
எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலைகள் குறித்தும்
இதன்போது ஆராயப்பட்டன.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களின் குடிதண்ணீர் தட்டுப்பாடு
தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் முன்மொழியப்பட்டுள்ள
புதிய திட்டங்கள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

