சட்டம் அனைவருக்கும் சமமானதாகும். ஆனால் இலங்கையில் சட்டம் சிலருக்கு கவசமாகவும், சிலருக்கு அடக்குமுறையின்
ஆயுதமாகவும் மாறியுள்ளதை தையிட்டி விகாரை சம்பவத்தில் காணக் கூடியதாக இருந்தது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை சம்பவம் தொடர்பில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (23.12.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி போராட்டத்தில் நடந்த அநீதி
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச பயங்கரவாதத்தால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த
பேரினவாதம் ஆபத்தானது. சட்டவிரோத கட்டிடமான திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இந்து மத குரு உட்பட நால்வர் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும் அவரது
தலைமைத்துவத்திலான தேசிய மக்கள் சக்தியினதும் அகோர முகத்தினை வெளிக்காட்டியது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்
ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் காணிகள்
சிங்கள- பௌத்த பேரினத்தின்
அடையாளமாகவும் நல்லிணக்கத்திற்கு எதிரானதுமான சட்டவிரோத விகாரையை
ஆட்சியாளர்கள் அகற்றாது அதனை பாதுகாப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை தடுத்து
நிறுத்துவதற்கு துணிவில்லாதிருப்பது ஏன்? தையிட்டி விகாரை நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.
இந்த நிலையில் தற்போதைய சட்டவிரோத விகாரையின் பிக்குவிற்கு அரச ஆதரவோடு பதவி
உயர்வு வழங்குவது மற்றும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி விகாரை அமைந்திருக்கும் மக்களுக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை வைக்க
மகா சங்கத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதற்கான பாதுகாப்பை கோரி
இருப்பது, தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கான கொடூர செயலாகும்.

சமய அமைப்புக்களின் ஒன்றிணைவு அவசியம்
குறிப்பாக, கிறிஸ்தவ சமூகம் இயேசுவின் பிறப்பிற்கு விழா எடுக்கும் காலகட்டத்தில் இயேசுவின் இறை கொள்கையோடு மக்கள் விடுதலை செயற்பாட்டோடு பயணிப்பவர்களாக தம்மை
அடையாளப்படுத்துவோர் அடக்குமுறைக்கு எதிரானதும் சிங்கள பௌத்த பெரும் தேசிய
வாதத்தின் ஓர் அடையாளமாகவும் திகழும் சட்டவிரோத கட்டடத்திற்கு எதிரான
போராட்டத்தினை வலுப்படுத்த வேண்டும்.

இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தினை எட்டி நின்று பார்ப்பதும், பாரா
முகத்துடன் இருப்பதும், நாட்டின் அமைதிக்கு எதிரான அடிப்படை மனித உரிமைக்கு
எதிரானதும், தமிழர் தேசியத்துக்கு எதிரான செயல்பாடு மட்டுமல்ல
மனிதத்துவத்திற்கு எதிரானதும், சமயங்கள் போதிக்கும் அறநீதிக்கும் எதிரான
செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

