மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயேசு பாலகன் பிறப்பான நத்தார் பண்டிகையின் தேசிய நிகழ்வு இன்று (25.12.2025) உஸ்வட்டகெய்யாவ தேவாலயத்தில் நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற இரவு ஆராதனையில் பேராயர் மெல்கம் ரஞ்சித் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
பேரிடருக்கு காரணமானவர்கள்…
அரசியல் வாதிகள் பணத்தை பெற்றுக் கொண்டு காடழிப்பு-சதுப்பு நிலங்களை நிரப்புதல்-மலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் போன்ற பாரிய அளவில் சுற்றுச் சூழலை நாசப்படுத்த உதவி செய்தனர்.அத்தோடு அவற்றுக்கு பக்கப் பலமாகவும் இருந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் இன்னும் மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.ஏன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.சிலர் தனது சுயநலத்திற்காக சுற்றுச் சூழலை முழுமையாக நாசப்படுத்தியதாலாகும்.

எவ்வித ஒழுக்கமும் அற்ற நிலையில் குப்பைக் கூளங்களை வீதியில் வீசி, முழு நாட்டையும் அசுத்தமாக்கியது யார்.நாங்களே இவற்றை செய்தோம்.இதற்கு அரசியல் வாதிகளும் பக்க பலமாக இருந்து செயற்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல, பணத்தை சேமிக்க துடிக்கும் பேராசைகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.ஆனால் நாம் மரணிக்கும் போது இவற்றை கொண்டு செல்லப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

