சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு எதிராக மன்ஹாட்டன் கூட்டாட்சி
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்றும்,
நீதிமன்ற சுதந்திரத்தை அச்சுறுத்தி தங்களைப் பழிவாங்கும் நோக்கில் இந்த
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
66 பக்க மனு
கனடாவைச் சேர்ந்த கிம்பர்லி ப்ரோஸ்ட், உகாண்டாவின் சொலோமி பலுங்கி போஸ்ஸா
மற்றும் பெனின் நாட்டைச் சேர்ந்த ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலாபினி-கான்சோ ஆகிய
மூன்று நீதிபதிகளே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல்
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததற்கும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள்
புரிந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த
அனுமதித்ததற்கும் பழிவாங்கும் வகையில் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் இந்த
தடைகளை விதித்தது.
இந்தத் தடைகளின் காரணமாக தங்களின் கிரெடிட் கார்டுகள், வங்கிச் சேவைகள்,
அமேசான், கூகுள் போன்ற இணையதளப் பயன்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதுடன், பயணங்களை
மேற்கொள்வதிலும், மருத்துவக் காப்பீடுகளைப் பெறுவதிலும் கடுமையான பாதிப்புகளை
எதிர்கொண்டு வருவதாக நீதிபதிகள் தங்களது 66 பக்க மனுவில்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச அளவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களை
விசாரிக்கும் இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்
ரஷ்யா போன்ற நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/international-criminal-court-file-case-trump-1782408051

