காலஞ்சென்ற பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர் அரசாங்கத்தின் அனுதாப அறிக்கையை பிரதமர் ஹரிணி சபையில் வாசித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அஞ்சலி உரையாற்றினார்.
இந்நிலையில் மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.
இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.
நந்த மாலினியின் மறைவுக்கு ஜனாதிபதி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள இரங்கள் செய்தியில்,
நமது காலத்தின் உண்மையான இசை மேதையான நந்த மாலினியின் மறைவு எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.காலத்தால் அழியாத அவரது இசை, இளம் மற்றும் முதியோர் எனப் பல தலைமுறை இலங்கை மக்களை ஊக்கப்படுத்தியது.
அவரது சிறப்பான கலைப் பாரம்பரியம் இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.
நந்த மாலினியின் பூதவுடல், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, நுகேகொடை, நவால வீதி, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (21) காலை 10.00 மணி முதல் நாளை (22) பிற்பகல் 3.30 மணி வரை வைக்கப்படவுள்ளது.
அவரது இறுதி விருப்பத்திற்கிணங்க, பொரளை மயானத்தில் நாளை மாலை 5 மணிக்கு, எவ்வித ஆடம்பரமான இறுதிச் சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

