சூழல் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்களிப்பு மகத்துவமானது.எனவே இயற்கை அனர்த்தங்களில் இருந்து எம்மை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடுகை செய்து அதனை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
‘மன்னாரின் பசுமை மாபெரும் மரநடுகை விழா’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தின் சமூக சேவையாளர் லங்கேஸ்வரன் தனது தந்தையின் 18 ஆவது ஆண்டு நினைவாக மன்னார் மாவட்டம் முழுவதும் பயன் தரும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையை இன்றைய தினம் வியாழக்கிழமை (17) ஆரம்பித்தார்.
ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (17) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இதன் போது மரக்கன்றுகளை நட்டு வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சூழல் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்களிப்பு மகத்துவமானது. அது உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது கூட பல இயற்கை அனர்த்தங்கள் இடம் பெற்றிருப்பதை நாங்கள் அவதானிக்கலாம்.
நேபாளத்தில் பனிமலை உருகுவது, அதேபோன்று எல்நினோ போன்ற அசாதாரண நிலைமை களுக்கெல்லாம் காரணம் சூழல் வெப்பநிலையில் ஏற்படுகின்ற அதிகரிப்பு.எனவே அந்த சூழல் வெப்பநிலைக் கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்களிப்பு மகத்துவமானது.
நாங்கள் சுவாசிக்கும் பொழுது வெளியிடுகின்ற காபன் ஈரொட்சைட்டை உள் வாங்குவதில் இந்த மரங்களுக்குரிய பங்களிப்பு மகத்துவமானது.
சூழலிலே காபன் ஈரொட்சைட் அதிகரிக்கும் பொழுது சூழல் வெப்பநிலையும் அதனோடு இணைந்த வகையில் அதிகரிக்கும். எனவே சூழல் சமநிலையை பேணுவதில் மரங்களின் பங்களிப்பு முக்கியமானது.அதைக் கருத்தில் எடுத்து, உண்மையில் தன்னுடைய தந்தை யாரது 18 வது நினைவாக இந்த முயற்சியை எடுத்திருப்பது மிகவும் பயனுள்ளது.
இந்த மரநடுகை முயற்சி சிறப்பான முறையில் இடம்பெற வேண்டும். தற்போது பொது இடங்கள் ,வைத்தியசாலை, பாடசாலைகள் போன்ற பொது இடங்களிலும், அதேபோன்று வீட்டுக்கு ஒரு மரமும் வழங்குவதற்கு, அவருடைய தந்தையார் சார்பாக இந்த முயற்சி எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
எனவே இந்த முயற்சியிலே பங்கெடுத்த லங்கேஸ்வரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளை இந்த பயன்தரு மரத்தைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் இந்த மரத்தை நல்ல முறையில் பராமரித்து அதன் பயனைப் பெற்றுச் செல்ல வேண்டும். மரம் மிகவும் உன்னதமானது.
எனவே தருகின்ற மரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்குரிய பலனை நீங்கள் குறுகிய காலத்திலே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே அதனைப் பெற்று பயனடைய வேண்டும் .
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட இருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

