நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மற்றும் நீர் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விமல் சுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மதகுகள் வழியாகவும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மகாவலி கங்கை மற்றும் களனி கங்கை ஆகிய ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பளை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கம்பளை பாலத்தின் கீழ் அதிகளவிலான நீர் வேகமாகப் பாய்ந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறிப்பாக, கம்பளை பாலத்தின் கீழ் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதுடன், நீரோட்டமும் வேகமாகக் காணப்படுகிறது.

