மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பிரதான வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன, கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (20) பெய்த கனமழையால் பாரிய கற்பாறைகள் சரிந்து பிரதான வீதிக்கு வந்துள்ளன.
இதனால் குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் வனராஜா, கெந்தகொளை கிறிஸ்தவ தேவாலயம் அருகில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக ஹட்டன், பொகவந்தலாவ, சாமிமலை, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், சரிந்து விழுந்த மண் திட்டுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகரின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் திட்டுகள் அகற்றப்பட்ட பின்னர் குறித்த வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் சாமிமலை ஓயாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாமிமலை – ஓல்ட்டன் தோட்டத்தின் கீழ்ப்பிரிவு பத்தாம் இலக்கப் பகுதியில் அமைந்துள்ள ஆத்தாடி பிள்ளையார் ஆலயம் வெள்ள நீரில் முற்றாக மூழ்கியுள்ளது.
குறித்த பகுதி ஒவ்வொரு முறையும் சீரற்ற காலநிலை நிலவும் போது ஆற்று நீர் பெருக்கெடுத்து வீடுகள் மற்றும் ஆலயத்துக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் கொண்ட பகுதியாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிவனடி பாத மலைத்தொடர் வனப்பகுதியான மீட்டியாகொட வனப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் காட்டாற்றில், வனப்பகுதியில் கடும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாரிய உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக தலையிட்டு, இப்பகுதியில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்திற்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுத்து மக்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேச சபையின் குறித்த வட்டார உறுப்பினர் கருணாகரன் முரளியும், இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால், அப்பகுதிக்கான வீதிப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

